பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416

சுந்தர சண்முகனார்


அறியாதவாறு கண்ணகியை இருட்டு நேரத்தில் அழைத்துக் கொண்டு மதுரைக்குப் புறப்பட்டு விட்டான்.

கோவலன் மதுரைக்குச் சென்றதற்கு உரிய உண்மைக் காரணம் இதுவே, எதற்கெடுத்தாலும் ஊழ்வினையின் மேல் பழிபோடுவது, எல்லார்க்கும் போல் இளங்கோ அடிகட்கும் வழக்கமாகி விட்டது. கோவலன் மதுரையில் கொலையுண்டது, எதிர்பாராத தற்செயலான நிகழ்ச்சியே.

3. கங்கையும் கன்னியும் வயந்த மாலையா?

மற்றொரு சிக்கல், கோவலன்-வயந்தமாலை ஆகியோர் தொடர்பானது. இந்தச் சிக்கல் என்ன என்று கண்டு, இதையும் அவிழ்க்க வேண்டும்.

தனி ஒரு நூல்

பாவலர் மணி திரு. ஆ. பழநி என்னும் அறிஞர் ‘கானல் வரியா? கண்ணிர் வரியா?’ என்னும் பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார். கோவலனுக்கும் மாதவியின் தோழியாகிய வயந்தமாலைக்கும் உடலுறவுத் தொடர்பு உண்டு என்பதையே இந்நூல் முழுதும் வலியுறுத்துகின்றது. இதைக் கூற ஒரு நூல் வேண்டுமா? என்பதை எண்ணும்போது வியப்பு தோன்றுகிறது.

கானல் வரியின் தொடக்கப் பாடல்கள் இரண்டும் படாதபாடு படுத்தப் படுத்துகின்றன. அப்பாடல்கள் வருமாறு:

“திங்கள் மாலை வெண்குடையான்
    சென்னிசெங்கோல் அது ஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவா தொழிதல் கயல் கண்ணாய்
மங்கைமாதர் பெருங்கற் பென்று
    அறிந்தேன் வாழி வாவேரி”