பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

75


கனவு கண்டு, பின்னால் தமக்கு வரவிருக்கும் துன்பங்களை எண்ணி, இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தால், தம் குழந்தைகட்கு முன்கூட்டியே முத்தம் கொடுத்துக் கொஞ்சி ஆவல் தீர்கிறார்களாம். தாம் கண்ட தீக்கனவைத் தம் மனைவியர் அஞ்சுவர் எனக் கருதி அவர்கட்குத் தெரிவிக்கா மல் மறைக்கிறார்களாம். அத்தகைய கனவு நிகழ்ச்சிகள் பின்வருமாறு:-

எட்டுத் திசைகளிலும் எரி கொள்ளிகள் வீழ்ந்தன. வற்றல் மரங்கள் பற்றி எரிகின்றன. ஞாயிறு பலவிடங்களிலும் தோன்றுகிறது. தீய பறவைகள் தீக்குரல் எழுப்புகின்றன. பற்கள் யாரும் கொட்டாமலேயே தரையில் கொட்டுகின்றன. தலை மயிரில் எண்ணெய் வார்க்கப்படுகிறது. பன்றி மேல் ஊர்கின்றனர். ஆடை களையப்படுகின்றனர். படைக் கலங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிலுடன் கவிழ்ந்து கீழே விழுகின்றன - இவை கனவில் கண்டவை. இச்செய்தி, “காலனும் காலம் பார்க்கும்” என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் (41) இடம் பெற்றுள்ளது.

இதுகாறும் கூறப்பட்டுள்ள செய்திகளால், தீய கனாக்கள் காணின் தீமை நிகழும் என்ற நம்பிக்கை ஒன்று மக்களிடையே இருந்தது. (இருக்கின்றது) என்பது புலனாகும். சாவை முன் கூட்டி அறிவிக்கும் தீய கனவு நிகழ்ச்சிகள் எத்தகையன என்பதும் புலனாகும்.

சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள மூன்று கனவுகளும் பின்னால் இறப்பு நேரும் என்னும் குறிப்பு உணர்த்துவனவாய் உள்ளன. இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் இங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ள செய்திகளும் சிலப்பதிகாரச் செய்திகளோடு ஒத்துள்ளமையை அறியலாம். (பாடல்களை அவ்வந்நூலில் கண்டு கொள்ளலாம். ஈண்டுதரின் பக்கங்கள் பெருகிவிடும்).