பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகுவாயில்

சிலப்பதிகாரம்

கழகக் காலத்தை அடுத்தவரும் சமண சமயப் பற்று உடையவருமாகிய இளங்கோவடிகள், மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் வாயிலாகக் கேட்டறிந்த கண்ணகியின் வரலாற்றில் கண்ணகியின் சிலம்பு முதன்மை பெற்றிருப்பதால் சிலம்பு தொடர்பான சிலப்பதிகாரம் என்னும் பெயரிட்டு நூல் இயற்றினார். இரும்பு+பாதை=இருப்புப் பாதை, கரும்பு+வில் = கருப்புவில் என்பனபோல, சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம் என்றாயிற்று. அதிகரிப்பது அதிகாரம். அதிகரித்தல் என்பது, தொடர்ந்து வளர்தல் — விருத்தியடைதல் எனப் பொருள்படும். அதிகாரம் என்னும் சொல்லுக்கு நூல் என்னும் பொருள் பிங்கல நிகண்டில் கூறப்பட்டுள்ளது. எனவே, சிலம்பு தொடர்பான நூல் சிலப்பதிகாரம் எனப் பெயர் சூட்டப் பெற்றது. இது, சிலம்பு எனச் சுருக்கமாகவும் பெயர் வழங்கப் பெறும்.

இந்நூல் தமிழில் உள்ள ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகும். இவற்றுள், தமிழ்நாட்டில் நடந்த வரலாறு பற்றியவை சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்களே. இவ்விரண்டனுள் சிலப்பதிகாரம் முதன்மை உடையது. சேரன்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் கோயிலைக் கட்டினான் – இளவல் இளங்கோ இந்தச் சொல் கோயிலைக் கட்டினார்.

சிலம்போ சிலம்பு

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று சுப்பிரமணிய பாரதியாரால் பாராட்டப் பெற்ற இந்நூல் ஒலி நயமும் உணர்ச்சியைப் பெருக்கும் ஆற்றலும் உடையது.

பெண்மைப் புரட்சியாகிய இந்நூல், இன்பியலாகத் தொடங்கப் பெற்றிருப்பினும் இறுதியில் துன்பியலாகவே முடிக்கப்பெற்றுள்ளது. இருப்பினும், வாழ்த்துக் காதை போன்ற பகுதிகளால் இளங்கோ அடிகள் ஓரளவு செயற்கை யான மங்கல முடிவு தந்துள்ளார்.

ஆசிரியர் கூற்றாக வரும் இடங்கள் சில அரிய நடையில் இருப்பினும், கதை மாந்தர்களின் கூற்றாக வரும் இடங்கள் அவர்கட்கு ஏற்ற நடையில் நடைபோடுகின்றன. நாடகக் காப்பியம் ஆயிற்றே - நடையின் சுவைக்குச் சொல்லவா வேண்டும்!