பக்கம்:சிவ வழிபாடு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு வந்தது. பரிகள் (குதிரைகள்) எல்லாம் நரிகளாக மாறின. குதிரை லாயத்தில் இருந்த பிற குதிரைகளையும் கடித்துக் கொன்றன. மறுபடியும் காட்டுக்கு ஒடின. இதனை அறிந்த அரசன் கடுங்கோபம் கொண்டான். மாணிக்கவாசகரை வைகை ஆற்றில், உச்சி வேளையில் சுடுமணலில் நிறுத்திப் பாறையைத் தலையில் ஏற்றிச் சுமக்கச் செய்யுமாறு கட்டளை இட்டான். அப்பொழுது இறைவன் ஆணைப்படி வைகையாற்றில் வெள்ளம் வந்தது. மாணிக்கவாசகரைத் துன்புறுத்தியோர் அவரை விடுத்து ஒடினர். வைகை ஆற்றின் உடைப்பை அடைப்பதற்கு ஊரார் எல்லோருக்கும் பங்கு பிரிக்கப்பட்டது ஊர் மக்கள் தத்தம் பங்கை அடைக்கத் தொடங்கினர். மதுரையில் பிட்டு விற்றுக் கொண்டிருந்த வந்தி என்னும் மூதாட்டியின் பங்கை அடைப்பதற்கு இறைவனே கூலி ஆளாக வந்தார். உடைப்பை அடைக்கும் பணியை மேற்பார்வை பார்த்து வந்த வேந்தன், பிட்டு வாணிச்சியின் கூலியாள் வேலை செய்யாமல் விண்பொழுது போக்கியிருக்கக் கண்டான். மண் சுமந்த பெருமான் மீது பிரம்பால் ஒங்கி அடித்தான். அந்த அடி எல்லா உயிர்களின் மேலும் பட்டது. அக்கூலியாள் ஒரு கூடை மண்ணைக் கொட்டினார். உடனே மறைந்தார். அடைப்பும் அடைபட்டது. மானிக்கவாசகரின் பெருமையை மன்னன் உணர்ந்தான். மன்னிப்புக் கேட்டு வணங்கினான். அமைச்சர் பதவியைத் துறந்து அடியவரான மாணிக்கவாசகர் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சிவத் தலங்களுக்கும் சென்று திருவாசகப் பாடல்களைப் பாடி இறைவனை, மனமுருகி வழிபட்டார். கடைசியில் சிதம்பரம் வந்து சேர்ந்தார். ஒரு நாள் நடராசப் பெருமான் அந்தனர் உருவம் கொண்டார். மாணிக்கவாசகரிடம் வநது திருவாசகம் முழுவதையும் ஏட்டில் எழுதிக் கொள்ள விழைவதாகக் கூறினார். மாணிக்கவாசகரும் அவருக்காகத் திருவாசகப் பாக்கள் அனைத்தையும் பாடினார். பெருமானும் எல்லாவற்றையும் எழுதிக் கொண்டார். 148

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/157&oldid=833437" இலிருந்து மீள்விக்கப்பட்டது