பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கணவனின் பேச்சு அவளுக்கு இதம் தந்தது “ஆமாங்க,” என்று தலையை ஆட்டினாள். வெளுத்த உதடுகள்தான்; ஆனால், புன்சிரிப்பில் களை இருந்தது; ஜீவன் இருந்தது சாவி கொடுத்தாற்போல, ஒரு கை தொட்டிலை ஆட்டி விட்டது. சிக்குப் பிடித்துப் பறந்த சுருட்டை முடிகளை நீவி கோதிவிட்டாள். இடுப்பு வலி கண்டதும் வடக்கு மூன்றாம் வீதியிலிருந்து ஜட்காவில் இங்கே ராணி ஆஸ்பத்திரியில் ‘அட்மிட்’ ஆனவளுக்கு வள்ளிசாக ஒருவாரம் கழித்துத்தான் பிரசவம் ஆயிற்று; ஆயுத கேஸ்!

அவசரநிலைப் பிரகடனத்தின் கெடுபிடி இங்கே புதுக் கோட்டையிலே, இந்த ராணி ஆஸ்பத்திரியிலும் கூடுதல்தான்!

குழந்தை திடுதிப்பென்று வீரிட்டது.

பதறிப்போனான் சுந்தர், “சுசீ, குழந்தைக்குப் பசிக்குது போல; எடுக்கிப் பால் கொடு,” என்றான் “சிக்கிரம் கொடேன்!”

வெட்கமும் சிரிப்பும் போட்டியிட, பல்லைக் கடித்துக் கொண்டே இடுப்பை நகர்த்தி, கால்களைக் கீழே தொங்க விட்டு, ஓர் அரைக்கணம் கழிந்ததும், கட்டிலைவிட்டு மெள்ள மெள்ள எழுந்தாள் சுசீலா. மாரகச் சேலைசரிதான்; ‘ப்ளவுஸ்’தான் சீராகவில்லை. தன்னையே விழுங்கிவிடுகிற மாதிரி பார்த்திருந்த அத்தானைக் கள்ளவிழிப் பார்வையால் விழுங்கியவாறு, காலடி எடுத்து வைத்தாள். அப்போதுதான் பூத்திருந்த ரோஜாப்பூவைப் பட்டு மெத்தையில் கிடத்தினாற் போன்று கிடந்த பச்சைப் பாலகனை வெகு பதனமாகத் தாக்கிக் கருத்துடன் தோளில் சார்த்திக் கொண்டாள்; மறுபடி கட்டிலில் அமர்ந்து மடியில் குழந்தையைக் கிடத்திக் கொண்டாள். இரண்டே இரண்டு ‘ட்ராப்’ குளுகோஸ் தண்ணிரில் அதன் பசி அடங்கியிருக்கலாம் சின்னப் பசியோ?—மேலும், சின்ன வயிறுதானே?—கண்களை மூடிக் கொண்டு ‘அது’ கணவரை ஆரம்பித்ததில், தாய்க்குத் தனியான அமைதி ஏற்படவே ஏற்பட்டது.