பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

தூங்கும் மழலையின் தூங்காத அழகை ரசித்துக் கொண்டிருந்தார் சுந்தர். பிரசவ வார்டில் இழைந்த இளங்காற்றிலே அவனுக்குத் தூக்கம் சொக்கியது. இரவு ‘போட்’ சென்றால் அவனுக்கு உட்கார இடமா கிடைத்தது? எழும்பூருக்கு வந்து சேர்ந்த போழ்தில் கிடைத்த வண்டி அதுதான்! இளம் வெய்யிலில் இரண்டே இரண்டு நரை மயிர்கள் இப்பொழுது பளிச்சென்று மின்னுகின்றனவே!

“அத்தான்!” சுசீலா விளித்ததுதான் தாமதம். நர்ஸ் தான் வந்தாள்; வந்தவள், நாடி பார்த்தாள்; ‘டெம்பரேச்சர்’ எடுத்தாள்; இரண்டு வெள்ளை மாத்திரைகளையும் ஒரு ரோஸ்’ மாத்திரையையும் அவளிடம் நீட்டிவிட்டு, அடுத்த பெட்’டுக்குப் போய்விட்டாள். கடமையிலும் இயந்திர ரீதியான பண்பு இந்த ஸ்டெல்லா நல்லவளாம்!

“என்ன, சுசி?” என்று செல்லமாய் மனைவியைக் கேட்டான் அவன்.

“மாத்திரைங்க!” என்றாள் அவள்.

“ஓ, அப்படியா?”

அவள் சிரிப்பிலே அவன் சிரிப்புக் கரைந்தது!

“ஊஸ்...குழந்தை தூங்குது!”

“ராத்திரி பிறந்த குழந்தை பகலிலேதான் தூங்குமாம், அத்தான்!”

“அப்படியா?”

“ம்...அப்படித்தான்!”

எவ்வளவு அழகாக, நளினமாக, பாங்காகப் புன்னகை செய்கிறாள் சுசீ!

அந்தப் புன்முறுவல் அவனை மயக்கிய வேளைகள் ஒன்றா, இரண்டா?

அதே புன்னகையில் அவன் மயங்கிய தினங்கள் ஒன்றா,இரண்டா?