பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மயங்கியும், மயக்கப்பட்டும் நின்ற நிலையிலே, காலம் புள்ளிமானாக எவ்வளவு தூரம் ஓடிவிட்டது! காலத்துக்குத் தொலைவு-தூரமெல்லாம் ஒரு பொருட்டா, என்ன?

ஆனால்-

அவன் வரை, ஓடிவிட்ட காலத்தில் இனிய பொழுதுகள் -அந்தப் பொழுதுகளுக்கு உயிரும் உயிர்ப்பும் நல்கிய மகத்தான நேரங்கள் அவன் மனத்தை விட்டு என்றும் ஓடி விடாது; எப்போதும் ஓடிவிடவும் முடியாதுதான்!-சுசீ-என் சுசீ-என்னோட அன்புச் சுசீ அன்றும் சரி, இன்றும் சரி, ஏன் என்றென்றுமே என் நெஞ்சத்திலே தஞ்சமடைந்திருப்பாள்!அவள்தான் நான்!-நான்தான் அவள்!...சுசீ... ஆமாம், உண்மைதான், டியர் சுசீலா!'

கொட்டாவி பிரிகிறது!

அந்த நாள் விரிகிறது!

சுசீலாவைப் பெண்பார்க்க வந்திருக்கின்றான் சுந்தர். மாப்பிள்ளைக் கோலம்; மகிழ்வான எண்ணங்கள்; மயக்கம் தரும் மோகக் கனாக்கள்; பூவும் பிஞ்சுமாகப் பூத்துக் குலுங்கிடும் மோகனக் காட்சி; ஆரம்பத்தை மட்டிலும் நினைத்துப் பார்க்கத் தூண்டும் பருவக் கிளர்ச்சி வேறு பெண் பார்க்க வந்தவன், பெண் கேட்கவும் வேளை கூடியது.

சுசீலாவுக்கு என்ன குறை?-குளிப்பாட்டி, உடுத்துப் பொட்டிட்டுப் பூச்சூடி, கருவறையிலே பிரதிஷ்டை செய்து வைக்கப்படும் அம்மன் சிலையெனக் காட்சி தந்தாள்; மாட்சி தந்தாள். பழகிவிட்ட வீட்டு நடையிலே, அப்போதுதான் நடை பழகிக் கொண்டவள்போன்று, அன்னநடை நடந்து வந்து, குனிந்திருந்த தலையைப் பான்மையுடன் நிமிர்த்த, கோலமலர் விழிகளை மட்டும் நிமிர்த்தி விடாமல், பூங்கரங்களைக் குவித்து 'வணக்கம்' தெரிவித்த அந்தப் பொன்னான நல்ல பொழுது, அவளுக்கு-சுசீலாவுக்கு எப்போதும் நினைவிலே சதிராடிக் கொண்டேயிருக்கும்!