பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதினொன்று




அந்தக் கடிதம்:


ஞாயிற்றுக்கிழமை!

சுந்தருக்கு விடுமுறை. இயந்திரத்திற்கு ஒய்வு; அவனுக்கும் கிடைத்தது. எட்டுமணிநேர அலுவல் என்பது வேடிக்கையான இந்த மனத்துக்கு மாத்திரம் விலக்கு விதியோ? ஐந்து தினங்களாகத்தான் அவன் அச்சகத்திற்குப் போய் வருகிறான். மாறுதலானதொரு சூழ்நிலை அமைந்தால், கொஞ்சத்துக்குக் கொஞ்சம் மனம் துன்பத்தின் தடத்தைவிட்டுப் புது வழியில் திரும்பி ஓரளவு அமைதியடைய நேரிடலாமென்று சுமதி சொன்னதன் பேரிலேயே இவ்வேற்பாடு. மினர்வா தியேட்டர்பக்கம் அச்சகம்; நடந்தே போய்த் திரும்பிவிடலாம். முதலாளி உமாமகேஸ்வரன் இதயபூர்வமான அனுதாபத்தைத் தெரிவித்த பான்மை அவனுக்கு ஆறுதலாகவே இருந்தது. எல்லாம் ஒரு தற்காலிகமான விளைவு என்பதும் அவனுக்குப் புரியாமல் இல்லை. சுசீலா தன் கதையை முடித்துக் கொண்டு போய் விட்ட போதிலும், அவனுடைய கதையை அவள் தொடர் கதையாக ஆக்கிவிட்டிருக்கும் அதிசயத்துக்கு என்ன பெயர் என்பதுதான் புரியாத புதிராக இருந்தது. தவிர்க்க முடியாததும் தப்பிக்க முடியாததுமாக உருவாகிவிட்ட இக் சூழலுக்குப் பேர்தான் விதியா?...