பக்கம்:சீனத்தின் குரல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நினைத்தது
__________

சீன வரலாற்றை, மகான் கன்பூஷியஸ் கால முதல் செஞ்சீனத் தலைவன் மா-சே-துங் காலம் வரையிலும் நான்கு நூல்களாக எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் எதிர்பார்த்த நூல்களெல்லாம் கிடைத்துவிட்டதாலும், வாசகர்கள் ஒரே நாளில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய வசதிக்காகவும் ஒரே நூலாக்கி வெளியிடுகிறோம்.

ஆகவே 2500 ஆண்டுகளாக சீனம் எழுப்பிய குரலின் வரலாற்றை இதில் காணலாம். ஏதாவது விடப்பட்டிருந்தால் அவ்வளவு முக்கியமானதல்ல என்ற நோக்கத்தால் விடப்பட்டிருக்கும். சுமார் இருபது மூல நூல்களைப் படித்து குறிப்புகளைச் சேகரித்து எழுதப்பட்டிருக்கிறது.

பசிக்குரல், பரிகாபக்குரல், அழுகுரல், அதிகாரக்குரல், சர்வாதிகாரக்குரல், ஆண்குரல், பெண் குரல், அபலைக்குரல், வஞ்சகக்குரல், ஞானக்குரல், விஞ்ஞானக்குரல், மறுமலர்ச்சிக்குரல், புரட்சிக் குரல் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தே இந்த, 'சீனத்தின் குரல்' உங்களிடம் வருகிறது. இதைப் படித்து நமது நாட்டில் நாம் எழுப்பவேண்டிய குரலைப்பற்றி சிந்திப்போமாக. உங்கள் பேராதரவுக்கு என் பேனாவின் சார்பாக நன்றி.


உங்கள் அன்பன்
சி. பி. சிற்றரசு.