பக்கம்:சீனத்தின் குரல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

91


எமது நாட்டை தட்டி எழுப்பக் காரணமாயிருந்த பகை நாட்டார் ஆயுதங்களுக்கு எமது நன்றி, விதி விதி என்று இதுவரை இருந்த நியதியைத் தம் மதியால் மாற்றிய மாவீரர்களுக்கு எமது நன்றி, நாயினும் கேடாய் மதிக்கப்பட்டு வந்த எங்களை இந்த நாடுத் தன் உண்மையான சேயென மதிக்கச் செய்த மேதைகளுக்கு எமது நன்றி.

கேட்பாரற்று திறந்து கிடந்த தலைவாயலின் முன் வீரர்களை நிறுத்தி வேற்றாரை விசாரிக்கச் செய்த விவேகிகளுக்கு எமது நன்றி.

பராரியும் இங்கில்லை. படாடூபக்காரனுமில்லை, ஏய்ப்பவனுமில்லை. ஏமாறுபவனுமில்லை. சுரண்டுபவனுமில்லை, சுண்டிப் போகின்றவனுமில்லை. உப்பரிக்கையிலிருப்பவனுமில்லை, ஒட்டைக் குடிசையிலிருப்பவனுமில்லை. உயர் ஜாதிக்காரனுமில்லை. அந்த உளுத்தக் கொள்கைக்குக் கைக்கட்டி நிற்பவனுமில்லை. ஜாதித் திமிருமில்லை. தாழ்ந்தவனுமில்லை. சமூகச் சக்கரச்சுழலில் சகலரும் ஒன்றே என்ற சங்கநாதத்தை, ஜெகமுழுதும் கேட்கச் செய்த சகலத் தியாகிகளுக்கும் எமது நன்றி.

பொருளாதாரம், தொழிலாதாரம் அறிவாதாரம், சுகாதாரம் ஆகிய இவைகளே ஆள்வோரைத் தேர்ந்தெடுக்க ஆதாரமாகட்டும் என்ற பொக்கிஷத்தையளித்த அரசியல் மேதைகளுக்கு எமது நன்றி.