பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 103


தலைவர்கள், மருதுவின் அணியில் இருந்து விலகி என்னிடம் வந்தார்கள். அவர்களைச் சின்னையாவின் (வேங்கன் பெரிய உடையாத்தேவர்) முகாமிற்குச் செல்லுமாறும், சீமையில் குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் மருதுவின் ஆட்களைத் தண்டிப்பதற்கு, அவர்க்ளைப் பிடித்துக் கொடுக்குமாறும் அவர்களுக்கு ஆணையிட்டேன். ஆனால், மீர்குத்புதீன்கான், அவர்களுக்கோ அவர்களைப் போன்று ஏதிரியின் முகாமில் இருந்து திரும்பி வருபவர்களுக்கோ, நாம் சேர்த்து கொள்வது பற்றி சரியான அறிவுரை வழங்கவில்லை. அதனால், அவர்கள் இந்தச் சீமையை நவாப் எடுத்துக் கொண்டு எங்களது குடும்பத்தின் பரம்பரை உரிமைகளைப் புறக்கணிக்கிறார் என்று அவர்கள் நினைக்கின்றனர். மீண்டும் அவர்கள் மருது அணிக்குச் சென்றுவிட விரும்புகின்றனர்.

“சிறிது காலத்திற்கு முன்னர், சர்க்காரிடத்தும் (ஆற்காட்டு நவாப்பிடத்தும்) என்னிடத்தும் முரண்பாடாக நடந்து கொண்டனர். இதனை தெரிவித்து இருந்தேன். இதன் காரணமாக, என்னைக் குத்புதீன் கானின் பொறுப்பில் இருத்தி வைத்து அவர் மூலம் சீமையின் முழு நிருவாகத்தையும் என்னிடம் ஒப்படைக்க ஆற்காட்டு நவாப் விரும்பினார். இதன் தொடர்பாக, நான் சிவகங்கைக்கு வந்து தங்கினேன். இது சம்பந்தமாக, நவாப் வழங்கியுள்ள பர்வானா (அரசு கட்டளை)யை ஆஜர்படுத்த சித்தமாக இருக்கிறேன்.

"தற்சமயம், இந்தச் சீமையின் ஒரு பகுதி மட்டும் சர்க்காரது நிர்வாகத்தில் இருந்து வருவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. சீமையில் கள்ளர்களது தொந்தரவு மிகுந்து விட்டது. நவாப்பும் கும்பெனியாரும் எனக்கு உதவியாக இருந்தனர். எனக்கு மரியாதை அளித்து நேர்மையுடன் நடந்து கொள்ளுமாறு மருது சேர்வைக்காரர்களை உறுதியுடன் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் எனக்கு ஏமாற்றத்தைத்தான் அளித்தனர். இப்பொழுது நான் நவாப்பின் கவுலை ஏற்று இருக்கிறேன். நீங்களும் நவாப்பும் சீமையைப் பொறுப்பேற்றுக் கொள்ள எனக்கு உதவ வேண்டும். குத்புதீன்கான் மூலமாக அவருக்கு மடல் அனுப்பி உள்ளேன். பேஷ்குஷ் தொகையையும் காணிக்கையையும் செலுத்துவதற்கும் அதற்கான பொறுப்பும் கொடுப்பதற்கு.

"இதனையே நீங்கள் நவாப் முத்தபர்கானிடம் பரிந்துரைத்து, சீமையின் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கும்படி சொல்ல வேண்டியது. நான் நவாப்பின் கவுல் உத்திரவை ஏற்று இங்குவந்துள்ளேன். அவர் நிர்வாகத்தை ஏற்றுள்ளார். அதனால் ஏற்படக்கூடிய புகழும் பழியும் அவரைச் சார்ந்தது. நான் நவாப்பின் குழந்தை, தங்களது முகாமில் உள்ள சின்னையா தேவையான விவரங்களைத் தங்களிடம் தெரிவிப்பார்."