பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 115

மாவீரர்கள் மதிமந்திரிகளாக, தளகத்தர்களாக, பிரதானிகளாகப் பணியாற்றியுள்ளனர் என்பது வரலாறு.[1] அவர்களில் சிறப்பாக விளங்கியவர்கள் வயிரவன் சேர்வைக்காரரும், அவரையடுத்து தளகர்த்தர் பணியேற்ற அவரது மருமகன் வெள்ளையன் சேர்வைக்காரருமாவர். (கி.பி.1735-1760) இவர்களில் வெள்ளையன் சேர்வைக்காரர் மிகப்பெரிய வீரர் வல்லவர் மட்டுமல்லாமல் பேராண்மை நிறைந்தவர். மதுரைப் போர்க்களத்தில் மைசூர் படைத் தளபதி கோப்பை நேருக்கு நேர் பொருதி அழித்தவர். மதுரைக் கோட்டையை ஆக்கிரமித்து இருந்த பட்டாணியர்களை வென்று மதுரை நாயக்க அரசின் கடைசி வழியினரான விஜய குமார பங்காரு திருமலை நாயக்கரை மதுரை அரசராக முடிசூட்டியவர் [2] கோழைத்தனம் காரணமாக பங்காரு திருமலை நாயக்கர் மதுரை அரசை கைவிட்டு ஓடிவந்தபிறகு மீண்டும், மதுரையைக் கைப்பற்றி சேதுபதி மன்னர் பொறுப்பில் வைத்து இருந்தவர். திருநெல்வேலிப் பாளையக்காரர்களை கடுமையாக அடக்கியவர். சேது நாட்டின் மீது படை எடுத்து வந்த தஞ்சைப் படைகளைத் துவம்சம் செய்தவர். ஆற்காட்டு நவாப்பின் பயமுறுத்தலுக்கு அஞ்சாத சிங்கம். மிகுந்த துணிச்சலுடன் சேதுபதி மன்னரையே நீக்கி விட்டு புதியவர் ஒருவரை சேதுபதியாக நியமனம் செய்து அறிவித்தவர். அந்த அளவிற்கு சேதுபதி சீமை மக்களது ஆதரவையும் செல்வாக்கையும் பெற்று இருந்தவர்.

அவரது சாதனைகளில் மறவர் சீமை மண்ணுக்குரிய ராஜவிசுவாசமும், கடமை உணர்வும் பரிமளித்ததைத்தான் சேதுபதிகளது வரலாற்று ஆசிரியர்களும் சேதுபதி சீமை மக்களும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அந்த வீரப் பிரதானியை, சேதுநாட்டு அரசராகவோ, சேதுபதி மன்னர்களுக்கும் மேற்பட்ட மாமன்னராகவோ சித்தரித்து எழுதவில்லை என்பதை இங்கு நினைவு கூறுதல் பொருத்தமானது. மல்லிகை என்றாலே மனத்தைக் கொள்ளைக் கொள்ளும் அதன் மணம் நமது நினைவில் வரும்தானே. 'மலர்களின் பேரரசி' என்றால்தான் மல்லிகையின் மனத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? மல்லிகை மலர்களின் பேரரசியும் அல்லவே! உறவினர்களையும் உற்ற நண்பர்களையும் வானளாவ உயர்த்திப் பேசுவது, எழுதுவது வேறு. நாட்டின் வரலாற்று நாயகர்களை சொந்தக் கற்பனை கொண்டு உட்படுத்தி உயர்த்தி வரைவது வேறு. குறிப்பாக, இரு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த அரசியல் தலைவர்களை பல்வேறு வரலாற்றுச் சான்றுகளுடன் அவர்களது ஒவியத்தைச் சித்தரித்தால்தான் அந்த தலைவர்களது அழகிய ஓவியம் உயர்வானதாகவும், மக்களது


  1. Raja Ram Rao.T. - Manual of Ramnad Samasthanam (1891)
  2. Ibid