பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 117

இதனால் திருச்சிக்கோட்டையைப் போல மதுரைக் கோட்டையிலும் ஆங்கிலேயர்களின் நடமாட்டம் மிகுந்தது. கோட்டையின் பெரிய அலுவலர்களும், தளபதிகளும் ஒய்வு நேரத்தையும், நாட்களையும் வேட்டையில் கழிப்பதற்கு, மதுரையை அடுத்துள்ள சிவகங்கைச் சீமைக் காடுகளை சிறந்த இடமாகக் கருதினர். வடக்கே தொண்டைமான் சீமையிலிருந்து தெற்கே மானாமதுரை வரையான சிவகங்கைச் சீமையின் அடர்த்தியான காடுகளில் அப்பொழுது வேங்கை, சிறுத்தை போன்ற கொடிய விலங்குகள் நிறைந்து இருந்தன. ஆதலால், வெல்ஷு, சுல்லிவன் போன்ற ஆங்கிலப் பிரமுகர்கள் சிவகங்கைச் சீமைக்காடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அப்பொழுது எல்லாம் சிவகங்கை மன்னர் பிரதானிகளது வரவேற்பும், விருந்தோம்பலும் அவர்களுக்கு காத்து இருந்தன. நாளடைவில், இவை நல்ல நேயத்திற்கு ஆதாரமாக அமைந்தது. தளபதி வெல்ஷு பதிவு செய்துள்ள குறிப்புகள்[1] இதனை பிரதிபலிக்கின்றன.

“... அந்தச் சீமைக்குச் சென்று இருந்த பொழுது அவர் (சிவகங்கைபிரதானி) எனக்கு நண்பரானார். நான் மதுரைப் பணியில் நீடித்த பொழுது, அவர் எனக்கு உயர்ந்தரக அரிசியையும், பழங்களையும், குறிப்பாக தடித்த தோளுடைய இனிப்பான ஆரஞ்சுப் பழங்களையும் அனுப்பி வைக்கத் தவறுவதில்லை. இத்தகைய பழத்தை இந்தியாவில் வேறு எங்கும் நான் கண்டதில்லை. அவர்தான் எனக்கு ஈட்டி எறிந்து, வாள்வீசி தாக்குவதைக் கற்றுக் கொடுத்தவர். வேறு எங்கும் அறியப்படாத வளரியைத் திறமையுடன் கையாண்டால் நிச்சயமாக நூறு கெஜ தூரத்து இலக்கை நொறுக்க முடியும்.”

இவ்விதம் சிவகங்கைப் பிரதானியைப் பற்றி பரங்கியர் உயர்வாக மதிப்பீடு செய்து இருப்பது அவர்களது அன்பான விருந்தோம்பலில் திக்குமுக்காடி அவர்களது வீரவிளையாட்டுக்களில் மனதை பறிகொடுத்ததுதான் காரணமாகும். ஆனால் அதே நேரத்தில், சிவகங்கைப் பிரதானி, பரங்கியர் மீது உண்மையான உயர்வான நேயம் கொண்டு இருந்தாரா...? உறுதிபடக்கூற இயலாதநிலை காரணம் ஒருவர் மற்றொருவர் மீது நட்பு பாராட்டுவது என்பது ஒருவர், மற்றொருவரது அழகு, அறிவு, ஆற்றல், அருங்குணங்கள் ஆகியவைகளின் அடிப்படையில்தான் அமைய முடியும். பரங்கிகளிடம், நம்மவரிடமில்லாத, மறைந்து இருந்து பாயும் புலியின் ராஜதந்திரம் இருந்தது. ஆனால் நமது போர் மறவர்களுக்குள்ள பேராண்மையும் போராற்றலும் அவர்களுக்கு கிடையாது. துப்பாக்கி, வெடிமருந்துதுணை


  1. James Welsh Military Reminiscenes (1868) Vol. I. P. 129-30.