பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 187

மாலையும் தமிழ் செய்த தவப் பயனாக கிடைத்திருக்கின்றன. காலத்தால் பிந்திய இந்தக் கவிராயர்களது படைப்புகள், சேனைதழையாக்கி செங்குருதி நீராக்கி ஆனை மிதித்த அரும்பெரும் வீரம் மணக்கும் செம்மண்ணில், செந்தமிழ் மனத்தின் வாசம் பரப்புவதற்கு இன்று நமக்கு கிடைக்காதது, மிகப்பெரிய இழப்பு என்பதில் ஐயமில்லை.

இந்த மன்னரையடுத்து சிவகங்கையின் அரியணையேறிய இளம் மன்னர் முத்து வடுகநாதர், தந்தைக்கேற்ற தனயனாகத் தமிழ் வளர்த்ததில் வியப்பில்லைதான். இவரது ஆட்சிக் காலத்தில் தமிழ்ப் புலவர்களின் கூட்டம் அருகிவிட்டாலும், மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயரது வழியினர் தமிழ்ப் பணி தொடர்ந்தது. இந்தக் கவிராயது பேரனான குழந்தைக் கவிராயர் பிரான்மலையில் வாழ்ந்து வந்தார். “தைக்கோடிப் பிறைப்போலத் தமிழ்க்கோடிப் புலவர் வந்தால், திக்கோடியலையாமல் தினங்கோடி பொன்னும் பொருளும் கொடை கொடுக்கும்” இந்த மன்னரை நாடி வந்து பாடி பொன்னும் பொருளும் சுமந்து சென்றார்.

இன்னும் அந்தப் புலவர் நூலில் பொருந்தியுள்ள பொன்னான வரிகள்,

“சந்தமும் கோட்டிச் சவுமிய நாராயணனை
வந்தனை செய் தொப்பமிடும் வண்கையான் - நல்நதுலவு
தென்குளந்தை மேவும் செயசிங்க கோகனக மின்குழந்தை
போலும் விசித்திரவான் - முன்குழந்தை
ஆயப்பருவத்தே ஆம்பொற் சுடிகாக தந்த
கோமனுக்கு நேராம் துரைராயன் - பூமன்
முரசுநிலையிட்டு முடிதரித்தே சேதுக்
கரசு நிலையிட்ட அபயன் - வரசதுரன்
தண்டளவ மாலைச் சசிவர்ண பூபனருள்
கொண்ட உபய குலதீபன் - மண்டலிகன்
ராசபுலி வடுகநாத பெரி யுடையான்
ராசன் இவன் ஆண்மை நாகரிகன்...”

மற்றும், இந்த மன்னரால் போற்றப்பட்டவர் பனசை நகர் என்று போற்றப்படும் நாட்டரசன்கோட்டை. தமிழ்ச் சக்கரவர்த்தி முத்துக் குட்டிப் புலவர். இவரது பூர்விக ஊர் காளையார் கோவிலுக்கு அண்மையில் உள்ள உருளிக் கோட்டை. இவர் இயல்பாகவே செந்தமிழில் சீர்மிகு பாடல்களை சிரமமின்றிப் பாடும் வரகவியாக இருந்தார். நாட்டரசன்கோட்டையில் திருக்கோயில் கொண்டுள்ள கொற்றவை கண்ணுடையம்மனைப் பற்றிய பள்ளும், அந்த ஊரின் காவல் தெய்வம் கறுப்பனர் பற்றிய பதிகத்துடன் பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார். இவரது கண்ணுடைய அம்மன் பள்ளு நமது தமிழில் உள்ள மக்கா பள்ளு, முக்கூடற்பள்ளு, திருமலை முருகன் பள்ளு ஆகிய