பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

திரும்பினர்.[1] அடுத்து தோல்வியுற்ற சந்தாசாகிபுவை ஆதரிப்பதாக நடித்த தஞ்சைத் தளபதி மானோஜி, அவரை 17.06.1752-ல்[2] நயவஞ்சகமாக கொன்று தீர்த்தான். தமிழக அரசியலில் அன்னியர்களின் ஆதிக்கம் அடித்தளம் பெற்றதை இந்த நிகழ்ச்சி தெளிவாக அறிவுறுத்தியது.

தமிழக அரசியலில் தனிமைப்பட்டு தவிக்கக்கூடாது என்பதற்காக சந்தாசாகிபு அணியுடன் இணைத்துக்கொண்ட சிவகங்கை இராமநாதபுரம் மன்னர்களது நிலை வேதனைப்படத்தக்கதாக இருந்தது. இதே நிலையில் தஞ்சை மன்னர் மறவர் சீமையை சிண்டிப் பார்க்க முயன்றார். இதனை அறிந்த நவாப் முகம்மதுஅலி, தஞ்சைஅரசின் படை உதவி, மதுரை, திருநெல்வேலி பாளையக்காரர்களை அடக்க தேவைப்படுவதால், மறவர் சீமை மீது போர் தொடுப்பதைக் கை விடுமாறு தஞ்சை மன்னரை அறிவுறுத்தினார்.[3] என்றாலும், நவாப்பினது அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, தஞ்சையின் மராத்தியப்படை மறவர் சீமைக்குள் புகுந்தது. தளபதி மானோஜி தலைமையில் நிகழ்ந்த இந்த ஆக்கிரமிப்பிற்கு புதுக்கோட்டைத் தொண்டமானும் தன்னால் ஆன உதவியைச் செய்யத் தவறவில்லை. ஆனால் விரைவில் மறவர்கள் மராத்திய ஆக்கிரமிப்பாளர்களை அனுமந்தக்குடிப் பகுதியிலிருந்து துரத்தி அடித்தனர்.[4]

ஆனால் மீண்டும் மே.1755-ல் கூடுதலான மராத்தியப் படைகள் அனுமந்தக்குடி மாகாணத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டன. உடனே ஆங்கில கம்பெனி கவர்னர், தளபதி காலியத்தை தஞ்சைக்கு அனுப்பி வைத்து, தஞ்சைப் படைகளை திரும்பப் பெற்று மதுரைப்படை எடுப்பிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.[5] அப்பொழுது மதுரையில் முகாமிட்டிருந்த ஆங்கிலத் தளபதி ஹெரானை மன்னர் முத்து வடுகநாதரும் சேதுபதி மன்னரும் நேரில் சந்தித்து தஞ்சை மன்னரது தொல்லைகளைத் தெரிவித்ததுடன், கும்பெனியாருடன் நேசத்தொடர்புகள் கொள்வதற்கு இணக்கத்தையும் அறிவித்தனர். மறவர் சீமையில் ஆங்கில கம்பெனியார் வணிகத் தொடர்புகள் கொள்வதற்கு ஏற்றவாறு தமது கடற்கரைப் பகுதியில் இரண்டு தீவுகளைக் கொடுத்து உதவுவதாகவும் சேதுபதி மன்னர் தெரிவித்தார்.[6] மறவர் சீமை மன்னர்களது நேசநிலைக்கு தளபதி ஹெரான் ஒப்புதல் அளித்ததுடன் தற்பொழுது தாம் நெல்லைப் படையெடுப்பை முடித்த பிறகு, மறவர்


  1. Rajayyan Dr. K. - History of Tamil Nadu (1972) P: 122
  2. S.C. Hill - Yousufkhan The Rebel Commandant 1931
  3. Military Consultations - Vol. 4/26-3-1753. P: 49-50
  4. Tamil Nadu Archieves Diaries Vol. A. P: 260
  5. Military Consultations Vol.4/4.6.1755. P: 89
  6. Raja Rama Rao.T - Manual of Ramnad Sannasthanam (1891) P: 238.