பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
104சீவக சிந்தாமணி
 


எல்லோரும் அவனிடம்தான் வந்து பேசிச் சென்றார்கள்.

“தேசிகப் பாவை” என்றான்.

அது அவள் இயற் பெயரா பொதுவாக நாட்டியப் பெண்ணுக்கு வழங்கும் பெயரா என்பதை அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

மறுபடியும் கேட்டான்.

“அவள் பெயர்”

“தேசிகப் பாவை” என்றான்.

அவள் ஆடலைவிட அவள் அவனுக்குக் கவர்ச்சி தந்தாள். இதைப் போன்ற பெண்களை அவன் இராசமா புரத்தில் பார்த்திருக்கிறான். இதைப் போன்ற நாட்டியக் காரி அழகி அநங்கமாலை; அவளுக்கு அடுத்தது இவள் என்று மதிப்பிட்டான்.

அவளும் இவனையே அடிக்கடி பார்த்து நோட்டம் விட்டாள். அவள் ஆட்டத்திற்கு இது ஆட்டம் கொடுத்தது. சற்றுத் தாளம் பிசகினாள். அதற்கு அவள் இவனிடம் நாட்டம் செலுத்தியதால் தான் என்பதை அரங்கின் செயலாளன் அறிந்தான்.

“யார் இவன்?” என்ற வினா அவனுக்கு ஏற்பட்டது. அவனோடு பேச வேண்டும் பழகவேண்டும் என்ற விருப்பம் தோன்றியது.

மின்னல் ஒளிபோல் அவள் பார்வை சீவகன் மீது பட்டு இவன் நெஞ்சைத் தொட்டது. முடிந்ததும் அவளைச் சந்தித்துப் பேசி முகவரி கேட்கலாம் என்று இருந்தான்.

அதற்குள் அரசமகன்; அவன் பெயர் உலோகபாலன்; அடுத்து அமர்ந்திருந்தவன்; இவனைத் தன் விருந்தினனாக அழைத்தான்.