பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேமசரி இலம்பகம்121



இப்பொழுது அது கெட்டது என்று அறிந்தான்.

“எத்தனையோ கற்கள் விட்டு எறிந்திருக்கிறேன்; கற்கள் தாம் மிச்சம்; காய் கீழே விழுந்தது இல்லை” என்றார் வீட்டுக்கு உரியவர்.

“சமைக்கச் சமைக்கக் கொட்டி வச்சதுதான் மிச்சம்” என்று அதற்கு விளக்கம் தந்தாள் அவர் துணைவியார்.

இலைகள் எடுத்துப் போட்டனர்.

அந்த வீட்டில் மங்கலம் தங்கியது. அவள் மனைமாட்சியைப் பெற்றாள்; அவள் அன்னை அகம் மகிழ்ந்தாள்; தந்தை எடை கொஞ்சம் கூடிவிட மருத்துவர் பருக்காமல் கவனித்துக் கொள்ள அறிவுரை தந்தனர்.

“இரவிலேகூடச் சாப்பிடுவதில்லை” என்றார்.

“நல்லதுதான்”

“வெறும் பலகாரம்தான்; பத்து இட்லி எட்டுப் பூரி” என்றார்.

அவர் பூரிப்புக்கு அந்தப் பூரிகள் காரணம் இல்லை என்பது மருத்துவருக்குத் தெரியும்.

“ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும், போகப்போக மெலிவு ஏற்படும். பெண்ணைப் பெற்றவர் நிச்சயம் கண்ணைக் கசக்கும் நாள் வரும்” என்று கூறி மருத்துவர் “வேறு வைத்தியம் தேவையில்லை இளைக்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

எக்கச் சக்கமாக மாட்டிக் கொண்டோமே என்று வருத்தப்பட்டான்.

“பரவாயில்லை; அவளுக்கு எந்த விலையும் கொடுக்கலாம்” என்று மன நிறைவு கொண்டான்.

விட்டுப்பிரிய வேண்டுமே; தொட்டுத் தாலி கட்டியாகி விட்டது; அந்த வேலியைக் கடப்பது எப்படி?