பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சூறாவளி
திட்டமிடுதல்  (Planning)

எனது நூல் சரியாகத் திட்டமிடப்படவில்லையாம். திட்டமிடுதல் என்பதற்கு இவர் என்ன பொருள் காண்கிறார் என்பது தெரியவில்லை. யான் எவ்வளவோ திட்டமிட்டு இந்நூலைப் படைத்துள்ளேன்.

சுந்தர காண்டம் நான் பல முறை படித்த பகுதி. எம். ஏ. தேர்வுக்காகவும் படித்துள்ளேன். கல்லூரியில் பாடம் நடத்தியுள்ளேன். இருப்பினும் இப்போது ஒரு முறை காண்டம் முழுவதையும் படித்தேன். திட்டம் இல்லாமல், ஒவ்வொரு படலமாகப் பாடல்களை எழுதுவது-கருத்து விளக்கம் செய்வது - அடுத்த படலத்திற்கு - அடுத்தடுத்த பாடல்களுக்குத் தொடர்ந்து போவது - என்ற முறையில் யான் நூலை எழுதவில்லை. பாடல்களைப் பல தலைப்புகளின் கீழ்ப் படலந்தோறும் பிரித்தெடுத்து எழுதி ஆய்வு விளக்கமும் தந்துள்ளேன். யான் எடுத்துக்கொண்ட பதினாறு தலைப்புகளாவன:-

கற்பனை நயச் சிறப்புகள், வரலாற்றுக் குறிப்புகள், சிறப்புச் செய்திகள், கருத்து வெளியீட்டில் புதுமை, திருக்குறள் ஆட்சி, கம்பர் கண்ட சிவமும் முருகும், சீதையின் பண்பு விளக்கம், அனுமனின் பண்பு விளக்கம், அசோகவனத்தில் சீதையின் நிலை, சீதை சொல்லி யனுப்பியவை, இராவணனுக்கு அறிவுரைகள், உரையாடல்கள், நிமித்தம் - கனா, அழுகைச் (அவலச்) சுவை, உவமை உருவகங்கள், சில அணி நயங்கள் - என்பன நான் சுந்தர காண்டச் சுரங்கத்திலிருந்து அகழ்ந்தெடுத்த தலைப்புகளாம். சுந்தரகாண்டப் பாடல்களை இத்தனை தலைப்புகளாகப் பிரித்து அடக்கியிருக்கின்றேனே இதுவே பெரிய திட்டமிடுதல் அல்லவா?