பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

சுந்தரகாண்டச்

தமிழ் அகராதிக் கலை நூல் நடை பற்றித் தூத்துக்குடி வ.உ.சி, கல்லூரியின் முன்னாள் முதல்வர் திரு அ. சீநிவாச ராகவன் அறிவித்திருப்பது:-

"நூலை மிகுந்த ஆர்வத்தோடு படித்தேன். பயனுடைய நூல்-சிறந்த பயன் அளிக்கும் நூல். தங்கள் விரிந்த புலமையையும், திரட்டிய செய்திகளைத் தெளிவாகக் கோவைப்படுத்தித் தரும் பாங்கையும், இயல்பான அழகிய தமிழ் நடையையும் மனமாரப் பாராட்டுகிறேன். இத்த கைய சிறந்த கருவி நூல்களுக்கு உரிய ஆதரவு கிட்ட வேண்டும்."

எனது மொழி நடைபற்றி மற்ற அறிஞர்கள் பாராட்டி யுள்ளனர்." ஆனால் மட்டமான மதிப்புரையாளர்க்கு என் மொழி நடை மட்டமாகத் தெரிகிறது. இது என் குறைபாடா அல்லது அவரது குறைபாடா? 1954 ஆம் ஆண்டே, யான், 'எழுத்தாளர் துணைவன்' என்னும் நூல் எழுதி வெளியிட்டவன். அத்தகைய எனக்கு, மட்ட மதிப்புரையாளர் தமிழ் எழுதக் கற்றுக்கொடுக்க வந்து விட்டார். நான் விண்ணில் மிதக்கும் மேதாவிகட்கு மட்டும் நூல் எழுதவில்லை; மண்ணில் நடப்பவர்க்கும் சேர்த்தே எழுதுகிறேன்.

பழம் பெரும் புலவர்களுள் சிலர் தம் இலக்கியங்களில் பெண் குறியாகிய அல்குலைப் புனைவு (வருணனை) செய்து எழுதியுள்ளனர். இவ்வாறு கூட நான் ஒன்றும் எழுதவில்லையே. கருத்து விளக்கத்திற்காக, உலகியல் நடைமுறைகளையும் மக்களின் பேச்சு வழக்காறுகளையும் யான் குறிப்பிடுவதுண்டு. மக்களின் பேச்சு வழக்காறு கொச்சையா யிருப்பின் அதற்கு யான் பொறுப்பாளி அல்லன். விளக்கத்திற்குத் துணைபுரியும் பேச்சு வழக்காறு போன்றவற்றை விடுதலும் முடியாது.