பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
41சூறாவளி

சொற்பொழிவாற்றினேன். பலரும் பாராட்டினர். மறுநாளும் நான் பேசவேண்டும் எனத் தங்கவைத்து விட்டனர். மறுநாள் காலை தெருவின் கடைக் கோடியில் சென்று யான் சிறுநீர் கழித்தேன். யான் எழுந்து நின்றதும் காவலர் (போலீசுகாரர்) ஒருவர் வந்து 'உங்களை ஐயா அழைத்து வரச் சொன்னார்' என்றார். ஐயா என்றால் யார் என்று கேட்டேன். சப்-இன்ஸ்பெக்டர் என்றார். ஏன் என்றேன், தெரியாது, அவரிடம் வந்து பேசிக்கொள்ளுங்கள் என்றார். கிராமத்தில் கடைக்கோடியில் சிறுநீர் கழித்தால்கூடவா போலிசார் பிடித்துக் கொள்வார்கள்? என்று எண்ணியபடியே அவர்பின் சென்றேன்.


காவல் நிலையத்திற்குள் சென்றதும், நிலையத் தலைவர் (சப்-இன்ஸ்பெக்டர்) கும்பிடு போட்டார். நானும் வியப்புடன் கும்பிடு போட்டேன். பின்னர் அவர், 'வாங்க' என்று கையசைத்துச் சொல்லி வெளியில் சென்றார். நானும் அவர் அழைத்தபடி அவர் பின்னாலேயே சென்றேன். அவர் ஒரு வீட்டிற்குள் சென்றார் - நானும் சென்றேன். அங்கே சிற்றுண்டி விருந்து நடந்தது. அவர் என் சொற்பொழிவைப் பாராட்டினார். அவர் முதல்நாள் மாலை வீட்டு உடையில் கூட்டத்திற்கு வந்திருந்தார் என்பதைத் தெரிந்து கொண்டேன். யான் அப்போது மயிலம் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்தக் காவல் நிலையத் தலைவர் பெயர் நாகராசன்.


பின்னர் நாகராசன் திண்டிவனம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். ஒருநாள் அவர் யான் இருந்த மயிலம் வீட்டிற்கு வந்தார். திண்டிவனத்திற்கு அழைத்துச் சென்றார். மாலைச் சிற்றுண்டிக்குப் பின் திரைப்படம் பார்த்தோம். இரவு 11 மணிக்குத் தனிப் பேருந்தில் (பஸ்ஸில்) என்னை மயிலத்திற்கு அனுப்பி வைத்தார்.