பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:Right42

சில ஆண்டுகள் கழிந்த பின்னர், ஒரு நாள் யான் புதுவைக் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தேன். என் பின்னால் யாரோ ஒருவர் என் இரண்டு தோள்களின் மேலும் தம் இரண்டு கைகளையும் வைத்து அசைத்தார். யான் திரும்பிப் பார்த்ததும் திரு. நாகராசன் என்று தெரிந்து கொண்டேன். என்னைப் புதுவைக்கு மாற்றியுள்ளனர் என்று கூறினார். வீட்டிற்கு அழைத்துச் சென்று தேநீர் அளித்தார். எனது கம்ப ராமாயணச் சொற்பொழிவினால் எனக்குக் கிடைத்த பரிசு இது.


(3) 1941-1943 காலத்திற்குப் பின் பல ஆண்டுகள் நடைபெற்ற நிகழ்ச்சிகளை விரிவஞ்சி விட்டுவிட்டு 1988-ஆம் ஆண்டிற்கு வந்து விடுகிறேன். 1988-ஆம் ஆண்டு புதுவையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், சீதை-இராமன் இவர்களின் காதல் காட்சியைப் பற்றிய கம்ப ராமாயணப் பாடல்களைப் புது முறையில் விளக்கியும் மற்றும் சில விளக்கியும் சொற்பொழிவாற்றி முடித்தேன். உடனே புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்புமிகு கி. வேங்கட சுப்பிரமணியனார், எனது சொற்பொழிவைக் குறிப்பிட்டு,

"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்" (643)

என்னும் குறளின்படி சொற்பொழிவு மிகவும் சுவையாய் இருந்தது என்று பாராட்டினார் - ஆடை அணிவித்தார். 'நீங்கள் எது கேட்டாலும் செய்கிறேன்' என்று கூறினார். அவரது உயரிய பண்பு பாராட்டிற்கு உரியது.


இவ்வாறு சொற்பொழிவுகளின் வாயிலாகவும் எனது கம்ப ராமாயண விளக்கத்தை யாரும் குறை கூறாது பாராட்டிப் புகழும்படிப் பேர் பெற்றுள்ளேன். சொற்பொழிவுகளேயன்றிக் கட்டுரைகளும் எழுதி வருகின்றேன்.