பக்கம்:சுயம்வரம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பெண்களாம், பெண்கள்! தங்கள் அழகால்,
அலங்காரத்தால் ஆண்களை வெறி பிடித்து அலைய
விடாத பெண்கள் என்ன பெண்கள்!...


16


நீ என்னை நினைத்துக்கொண்டிருந்த அளவுக்கு உன்னை நான் நினைத்துக்கொண்டிருக்கவில்லை!’

‘நீ என்னை நினைத்துக்கொண்டிருந்த அளவுக்கு உன்னை நான் நினைத்துக்கொண்டிருக்கவில்லை!’...

அவன் சொன்ன இந்த வார்த்தைகளை அவள் இதயம் மட்டும் இப்படித் திரும்பத் திரும்ப எதிரொலிக்கவில்லை; சாலையில் அப்போது ஓடிக்கொண்டிருந்த கார், பஸ் ஹாரன் சத்தங்களும், ஆட்டோ, ஸ்கூட்டர் ஆகியவற்றின் அலறல்களும், சைக்கிள் மணிகளின் ‘கிண்கிணி’ ஒலிகளும் கூட அப்படியே எதிரொலிப்பதுபோல் இருந்தன அவளுக்கு!

உபசாரத்துக்காகச் சொல்வதாயிருந்தால், அவர் அதைக் கொஞ்சம் மாற்றி, ‘நானும் உன்னை நினைத்துக்கொண்டு தான் இருந்தேன்!’ என்று இழுத்தாற்போலவாவது சொல்லியிருக்கலாம்; அதற்கும் மேலே போய்ச் சொல்வதாயிருந்தால், ‘என்று உன்னைப் பார்த்தேனோ, அன்றிலிருந்து எனக்குச் சாப்பாடு இறங்குவதில்லை; தூக்கம் பிடிப்பதில்லை’ என்று கூட அளந்திருக்கலாம். நல்ல வேளை, அவர் அப்படிப் பட்டவராயில்லாமல் இருப்பது தன் பாக்கியம்! இப்போதெல்லாம் ‘உதடு வேறு, உள்ளம் வேறு’ என்று இருப்பவர்களைத்தானே உலகமெங்கும் பார்க்க முடிகிறது? இரண்டும் ஒன்றாயிருப்பவர்களை எங்கே பார்க்க முடிகிறது?...

இப்படி நினைத்த அவள் உள்ளத்தில் உடனே எழுந்த கேள்வி இது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/127&oldid=1385159" இலிருந்து மீள்விக்கப்பட்டது