பக்கம்:சுயம்வரம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

123


நமக்கு நாமே முட்டி மோதிக்கொண்டுதான் ஏற வேண்டுமா? ஒழுங்காக நின்று ஒருவர் பின் ஒருவராக ஏறினால் என்னவாம்?" என்றார்.

"அப்படித்தான் ஏறுகிறார்களே, வயதானவர்களுக்கும் தாய்மார்களுக்கும் முதலில் இடம் விட்டுவிட்டாவது ஏறுகிறார்களா என்றால், அதுவும் இல்லை!" என்றார் இன்னொருவர்.

இந்தச் சமயத்தில் அங்கே ஒரு பஸ் வந்து நின்றதோ இல்லையோ, அதுவரை அங்கே நின்று பேசிக்கொண்டிருந்த அத்தனை பேரும் தாய்மார் என்றும் பார்க்காமல், வயதானவர் என்றும் பார்க்காமல் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு ஏறினார்கள்!

இந்தக் காட்சியைச் சற்றுத் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மாதவன், "இதிலிருந்து உனக்கு ஏதாவது தெரிகிறதா?" என்று நீலாவைக் கேட்டான்.

"ஓ, தெரிகிறதே! பஸ் பிரயாணிகள் பேச்சு, பஸ் வந்தால் போச்சு!" என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.

"அது மட்டும் அல்ல; உபதேசம் எதுவாயிருந்தாலும், அதை உபதேசிப்பவர் யாராயிருந்தாலும், தனக்கென்று வரும்போது அதைப் பொருட்படுத்துவதில்லை என்றும் தெரிகிறதல்லவா?" என்றான் அவன்.

அவள் சிரித்தாள்; "ஏன் சிரிக்கிறாய்?" என்றான் அவன்.

"ஒன்றுமில்லை; அதே மாதிரிதான் நீங்களும் என்னைப் பொருட்படுத்தாமல் இருந்து விட்டீர்கள், இல்லையா?" என்றாள் அவள்.

"உண்மைதான்; நீ என்னை நினைத்துக்கொண்டிருந்த அளவுக்கு உன்னை நான் நினைத்துக்கொண்டிருக்கவில்லைதான்!" என்றான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/126&oldid=1384973" இலிருந்து மீள்விக்கப்பட்டது