பக்கம்:சுயம்வரம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

95


நீங்களும் அவரைப் போலவே தன்னந் தனியாக நின்று இங்கே ஏதோ பேசிக்கொண்டிருக்கவே..."

"தன்னந்தனியாகவா!" என்று தன்னைச் சுற்றி ஒருமுறை பார்த்துக்கொண்ட அவன், "நாசமாய்ப் போச்சு! நான் ஒரு அமெச்சூர் நாடக நடிகன் ஐயா, நாடக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன்; ஆளை விடும்!" என்று சமாளித்து அவரை அனுப்பிவிட்டு, மீண்டும் ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்தான். காணவில்லை; மதனாவைக் காணவேயில்லை!

பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் உள்ளே போய் விட்டாளோ? என்ன நெஞ்சழுத்தம் அவளுக்கு!

அதற்காக அவளை நான் விட்டுவிடுவேனா? அதுதான் நடக்காது என்னிடம். காறி முகத்தில் துப்பினாலும், 'என்ன சார், இப்படி விளையாடுகிறீர்களே!' என்று சமாளிக்கும் 'முற்போக்காளர்க'ளைச் சேர்ந்தவனல்லவா நான்? மீண்டும் முயல்வேன், மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருப்பேன்!....

இந்த 'விரத'த்தை மேற்கொண்ட பின், 'எதற்கும் அந்த மாதவனைப் போய்ப் பார்ப்போம்' என்று ஆனந்தன் அங்கே போனபோதுதான், அருணா அவனிடம் விடை பெற்றுக் கொண்டிருந்தாள். அவள் போன பின் அவனைப் பார்த்துப் பேசி விட்டுத் திரும்பிய ஆனந்தன், மறுபடியும் மதனாவிடம் வரவில்லை; நேரே அலுவலகத்துக்குப் போய்விட்டான்.

'ஆனந்தன் இன்று எப்படியும் மதனாவைச்சந்தித்திருக்கக் கூடும்' என்பதை ஒருவாறு ஊகித்தறிந்து கொண்ட அருணா, விடுதிக்கு வந்ததும் வராததுமாக இருக்கும்போதே, "இங்கே ஆனந்தன் வந்திருந்தானா?" என்று மதனாவைக் கேட்டாள்.

"ஆமாம்" என்றாள் அவள், அசிரத்தையாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/98&oldid=1384823" இலிருந்து மீள்விக்கப்பட்டது