பக்கம்:சுயம்வரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

சுயம்வரம்


"என்னடியம்மா, உனக்கு? 'அகத்துக்காரரைக் கையோடு அழைத்துக்கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய் இவள் மட்டும் வந்திருக்கிறாளே!' என்று நினைக்கிறாயா? அங்கே போய்ப் பார்த்தால் நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது. யாரோ லட்டு மாமியாம்; அவள் கழுகுக் கண்களுக்கு யாரும் தப்ப முடியாது போல் இருந்தது. அப்படியும் துணிந்து நான் ஒரு பொய் சொன்னேன். 'அது என்ன பொய்?' என்று தெரியுமா, உனக்கு?"

"என்ன பொய்யாம்?"

"என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் நீ எங்கேயோ ஓடிப் போய்விட்டதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்டி அம்மா! அதைக் கேட்டாவது அந்த லட்டு மாமியையும், காராபூந்தி நீலாவையும் விட்டுவிட்டு இங்கே அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி வரமாட்டானா என்றுதான் அப்படி ஒரு பொய்யைச் சொன்னேன் அவனிடம். நீ அதைத் தப்பாக எடுத்துக்கொண்டு விடாதே!"

இதைக் கேட்டதும் தன்னை யாரோ தூக்கி வாரிப் போட்டது போல இருந்தது மதனாவுக்கு. என்னதான் இருந்தாலும் இப்படி ஒரு பொய்யா!...

அதற்குமேல் அவளை யோசிக்கவிடாமல், அப்போது வெளியேயிருந்து ஒரு குரல் வந்தது:

"மதன்! ஓ, மதன்!"

சந்தேகமேயில்லை ; அது அவருடைய குரல்தான்!

இப்படி நினைத்தாளோ இல்லையோ, குதிரையைத் தட்டி விட்டதும் துப்பாக்கியிலிருந்து கிளம்பும் ரவையைப் போலப் பாய்ந்து வந்து, வாசலில் நின்று கொண்டிருந்த மாதவனை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டு விட்டாள் அவள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/99&oldid=1384828" இலிருந்து மீள்விக்கப்பட்டது