பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9

நான்காம் நாள் மாலையில் கிரிஜா, பாலத்தருகில் படித்துறையில், கால்களை நீரில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். சின்னஞ்சிறு இலைப்பகுதிகளில், பூக்களின் இடையே, தீப ஒளிகள் மிதந்துவரத் தொடங்குகின்றன. ஒ... மாலை ஆரத்தி...

காவித் துறவியானாலும், கட்டழகியானாலும், பஞ்சுப் பிசிறுகளாய் நரைத்துத் தேய்ந்த கிழவியானாலும்,

இந்தத் தீப வழிபாட்டை நீர்ப்பெருக்குக் காணிக்கை யாக்குகின்றனர்.

அந்தத் தீபங்கள் இலை, மலர், சுற்றிலும் முழுக்கும் நீர், என்றாலும் இலைநடுவே சில ஒளித்திரிகள் சங்கிலியை அறுக்கும் வேக ஒட்டத்திலும் சுழிப்பிலும் அணையாமல் செல்கின்றன. பாலம் கடந்து சுழற்சியிலும் வீழ்ச்சியிலும் கூட அணையாது செல்லும் தீபங்கள் பாலம் கடந்து வந்தாலே அவற்றைக் குழந்தைபோல் வாழ்த்துகிறது உள்ளம்.

நாள்முழுதும் அவசரத்திலும் பரபரப்பிலும் திரியும் இளம் தலைமுறையினரை நினைக்கிறாள்.

கவியும் சாருவும் அறையில் எப்போதும் பரபரப்பான ‘ட்ரம்’ ஆட்டபட்ட இசையைப் போட்டுக்கொண்டு பழகுகிறார்கள். அமைதியாக இருத்தல், போர் என்று அலுப்பூட்டுவதாகக் குடைகிறது. தந்தை ‘வாக்மன்’ செட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த அமைதி கூட்டாத வெளி இசையைக் காதுக்குள் வாங்கி வேறு அநுபவிக்க வேண்டுமா? அதைப் போட்டுக் கொண்டு, பாடம் படிக்கிறாள்...அந்தக் குழந்தைகள் வாழ்க்கையாகிய இந்த நீரோட்டத்தில், எதிர்காலமாகிய ஒளித்திரியை எப்படி ஏந்திச் செல்லப் போகிறார்கள்?