பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைத்ததை நிறைவேற்றினேன்


நடிகைகளைப் பற்றி நான் எழுதி வருவது இன்று நேற்று அல்ல. இருபத்தைந்து ஆண்டுகளாகவே எழுதி வந்திருக்கிறேன்.

ஆனந்த விகடனில் இவர்களைப் பற்றி நான் 1971 ஆம் ஆண்டில் தொடர்ந்து எழுதி வந்த போது, நாட்டில் அதற்குப் பாராட்டும் பரபரப்பும் இருந்து வந்தன.

நடிகைகளைப் பற்றி எழுதலாமா? என்ற ஒரு கேள்வியைச் சிலர் எழுப்பக் கூடும். ஏன் எழுதக் கூடாது?

கவிஞர்கள் முத்தமிழில் முதல் தமிழை வளர்ப்பது போல, நடிகைகள் மூன்றும் தமிழாகிய நாடகத்தமிழை நாள்தோறும் வளர்க்கிறார்கள்.

அவர்களின் சிறந்த நடிப்பிற்குப் பாரும் பாராளுமன்றமும் பல பட்டங்களைக் கொடுத்துச் சிறப்பிக்கின்றன. அப்படியிருக்க அவர்களைப் பற்றி ஏன் எழுதக்கூடாது?

நாயன்மார்களைப் பற்றி எழுதுவதுதான் கவிதை என்பது அல்ல, நடிகைகளைப் பற்றி எழுதுவதும் கவிதைதான்.

நாட்டில் விளம்பரம் பெற்ற நடிகைகளைப் பற்றி நான் எழுதுவதற்குக் காரணம், இவர்கள் மூலம் கவிதைகள் விளக்கம் பெற்றுவிடும் என்பதற்காக அல்ல, விளம்பரம் பெறவேண்டும் பெறும் என்பதற்காக!

இந்த நூதனக் கவிதைகளை நூலாக வெளியிட வேண்டு மென்று நான் நினைத்தேன். நிறைவேற்றி விட்டேன்.

சுரதா