பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

143


முடிவேந்தரையும் குறுநிலத் தலைவரையும் பாடிய சான்றோர் பாட்டுக்களுள் பாடியவரும் பாடப்பட்டோருமாகிய இருதிறத்தாரும் இன்னாரென விளங்காதபடி பதினொரு பாட்டுக்கள் சிதைந்துள்ளன ஏனைப் பாட்டுக்களைப் பாடியோருள் வேந்தரும் வணிகரும், வேளாளரும், பார்ப்பாரும் எனப் பல இனத்தவரும் இருக்கின்றனர் மகளிருள், அள்ளுர் நன்முல்லையார், இளவெயினியார், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், காவற்பெண்டு, பாரிமகளிர், பூங்கண் உத்திரையார், பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, பெருங் கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார், பேய்மகள் இளவெயினியார், மாறேக்கத்து நப்பசலையார், வெண் னிக் குயத்தியார், வெறிபாடிய காமக்காணியார் முதலியோர் தெளிவாய்த் தெரிந்த நல்லிசை மெல்லிய லாராவர்

இனி, புறத்திணைக்கேயுரிய துறைகளுட் சில வற்றைப் பொருளாகக் கொண்ட பாட்டுக்கள் பலவுள்ளன என முன்பே கூறினோம். அவற்றால், நாடு நாட்டு மக்கட்குரியது; நாட்டுமக்கள் நாடாளும் வேந்தர்க்கு உடம்பாவர்; தன் நாட்டவராகிய உடம்புக்குத் தான் உயிரெனக் கருதுவது வேந்தனுக்குக் கடன்: “மன்னன் உயிர்த்தே மலர்தலையுலகம், யான் உயிர் என்பது அறிகை வேந்தர்க்குக் கடன்” என்பது தமிழகத்து அரசியலடிப்படையென்பதை விளக்குகிறது

“எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி “ நாடும் நற்புகழ் பெறுகிறது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது நாட்டு மக்களின் கருத்து, அரசுக்கு, “வினை வேண்டு வழி அறிவுதவியும், படைவேண்டுவழி ஆளுதவியும் நாட்டவர் துணைபுரிகின்றனர் நாட்டின் நன்மை குறித்து வேண்டுவன எடுத்தோதும் பேச்சுரிமையும், வேண்டுவார் வேண்டிய தெய்வங்களை வழிபடும் வழி பாட்டுரிமையும், வணிகர்க்கு வாணிக வுரிமையும், கல்வி, அரசியல் முதலிய துறைகளில் ஆடவரையொப்ப மகளிர்க்கு உரிமையும் தந்து மகிழ்வது புறநானூறு