பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

செந்தமிழ் பெட்டகம்


“வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்” என்பது வாழ்வின் குறிக்கோள். நாரும் போழும் பருத்தியும் பட்டும் தழையும் தோலும் கொண்டு தூசும் துகிலும் உடையும் ஆடையும் பாயலும் போர்வையும் நெய்வது முதலிய தொழில் வகைகளும், நெற்சோறும் பலவகை இனிய பண்ணியங்களும் ஊனும் பிறவும் ஆகிய உணவு வகைகளும், பலவேறு கருவி வகைகளும் சிறந்து காணப்படுகின்றன

அரசியல் குறித்து நடக்கும் போர் களிடையே மகள் மறுத்தது குறித்தும் போர் நிகழ்கிறது; தமிழ் வேந்தரும் செல்வரும் புலவர், பாணர், கூத்தர் முதலியோர்க்கு மிகுபொருள் கொடுத்து, முறையே இயலும் இசையும் கூத்துமாகிய தமிழை வளர்க்கின்றனர்; இச் செல்வர்களை, “ அது உம் சாலும் தமிழ் முழுதறிதல்” என்று சான்றோர் வியந்து கூறுகின்றனர் “புலவர் பாடும் புகழுடையோர்” வானுலக வாழ்வுக்குரியர் என்பதும் ஒரு கொள்கை உள்ளதன் உண்மையும் நல்லதன் நன்மையும் எடுத்தோதுவர் இச்சான்றோர்; “செய்யா கூறிக் கிளத்தல், எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே’ என்பதும் இவர்கள் கூற்று ஞாயிறு மண்டிலத்துக்கும் நில மண்டிலத்துக்கும் இடையே, “ஞாயிற்றுப்பரிப்பு” (ஈர்த்து நிற்கும் பிணிப்பு) உண்டு என்றும், வானத்தின் மேலே செல்லச் செல்லக் காற்றே இல்லாத “வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்” உண்டென்றும், இவ்வாறு இத்தொகை நூல் கூறும் நுண்பொருள் பல வுள்ளன

இவ்வாறு சங்ககாலத் தமிழ் மக்களிடையே நிலவிய அரசியல், சமயம், வாணிகம், சமுதாய வாழ்வு, அறிவாராய்ச்சி முதலிய கருத்துகளைப் போதிய அளவில் எடுத்துக்காட்டும் இலக்கியக் கருவூலமாக நிற்கிறது புறநானூறு இதன்கண் வழங்கும் சொற்களுள் மக்கள் பேச்சுவழக்கில் இன்றும் உள்ளன

புறத்திரட்டு : என்பது சங்க நூல்கள் முதலாக 15ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல்களிலுள்ள புறப் பொருட்-