பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

181

கலையின் பெருமிதம் குறை யாமல் வீறுபெறப் புகழ்கின்றான்

கரிகாற் பெருவளத் தானது சோழநாட்டின் பெருமையையெல்லாம் ஒவ்வொன்றாகச் சுவைத்துச் சுவைத்து ஆறஅமர இருந்து, திளைத்து உண்பார்போலக் கூறி முடிக்கின்றான் அவன் வாய்மொழியாகக் கூறும் பாடற் பகுதியில் பின்னாளைய நாட்டுப்படலத்திற்குப் புலவர் வித்திடுகின்றார் இதனைப் பாடிய புலவரது பெயரால் இவரைப் பொன் என்று கூறுவாரும் உளர் இவரை முடமென்று கூறுவாரும் உண்டு

இந்தப் பாட்டின் தலைவன் உருவப்பல்தேர் இளஞ் சேட்சென்னியின்மகனான கரிகால்வளவன்; வெண்ணிப் போர்க்களத்தே சேரனையும் பாண்டியனையும் வென்றவன்; தாய் வயிற்றிலிருந்தே தாயம் எய்தியவன்

மூன்றாம் பாட்டாம் சிறுபாணற்றுப்படை 269 அடிகள் கொண்ட ஆசிரியப்பா இதனைப் பாடியவர் இடைக் கழிநாட்டு நல்லுார் நத்தத்தனார், இடைக்கழி நாடு (இட்க்கநாடு-மரூஉ) சென்னைக்குத் தெற்காகக் கடலை யொட்டி உப்பங்கழி பாயும் பகுதியேயாம் அங்குள்ள நல்லுாரில் பிறந்த இவர் தலைசிறந்த பாடல் பாடியதன் பயனாகச் சிறப்பினைக் குறிக்கும் ‘ந’ என்ற அடையோடு நத்தத்தனார் என்று வழங்கப் பெறுகின்றார், ஒய்மான் நாட்டு நல்லிக்கோடனைப் புகழ்ந்து பாடியபாட்டே இந்தப் பாட்டு

ஒவியர் குடியின் தலைவனை ஒய்மான் என்பர் அவன் நாடு ஒய்மான் நாடு “கிடங்கிற்கோமான்” என்று புலவர் அவனைப் புகழ்கின்றார் கிடங்கில் (கிடங்கால்மரூஉ என்பது தென்னார்க்காடு மாவட்டத்தில் திண்டி வனத்தில் இருக்கிறது மாவிலங்கை என்பது அவனுடைய அரண்மனை இருந்த இடம், இஃது அருவாநாடு, அருவாவடதலை நாடு என்ற இரண்டும் சேரும் இடத்தில் இருந்தது என்பர் எயிற் பட்டினமும் அவனுடையது