பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

செந்தமிழ் பெட்டகம்

கிரேக்க பூகோள ஆசிரியர்கள் கூறும் சோபடான் இதுவேபோலும். உப்புவேலூர் என இப்பொழது வழங்கும் வேலூரும் ஆமூரும் அவனுடைய ஊர்களே. இவையெல்லாம் தொண்டை மண்டலத்தில் உள்ளவை. முருகனை வழிபட்டுப் பகைவரை வெல்லப் பூவையே வேலாகப் பெற்றான் அவன் என்பது செவிவழிச் செய்தி.

பொருநராற்றுப் படையிற்போல் யாழை மீட்டும் விறலியின் அழகினைக் கற்பனைத் திறமெலாம் தோன்றப் புகழ்ந்துகொண்டே தொடங்குகிறது இந்தப் பாட்டு. இயற்கையும் பெண் அழகும் ஒன்றோ டொன்று முதலும் நிழலுமாக அமைந்திருக்கின்ற ஒற்றுமை நயத்தைச் சொற்றொடர்களிலும் எதிரொலிக்குமாறு பாடு கின்றார் புலவர். பின்னர் மூவேந்தர் நாடு பரிசில் தருகிற வண்மை குன்றிக் கிடப்பதனை அந்தந்த நாட்டுப் பெருமையோடு வைத்துப்பாடிப் புலம்புகின்றர். எருமை பூக்களை மேய்ந்து, மிளகின் கொடி படர்ந்த பலா மரத்தின் நிழலை மஞ்சனின் இலைதன்னைத் தடவப் பூப் படுக்கையில் அசைபோடுவதனை மலையும் காடுமாய்ச் சிறந்த சேர நாட்டின் அழகாகக் காண்கின்றார்.

குரங்குகள் சிறுவரைப்போல் கிளிஞ்சலுக்குள் முத்தினை வைத்துக் கிலுகிலுப்பை ஆட்டும் அழகினை முத்தாற் சிறந்த பாண்டிய நாட்டின் அழகாகக் காண்கின்றார். தண்ணிர்த் துறையரு கேவளர்ந்த மரங்களின் வரிசைகளிடையே மகரந்தப் பொடிகள் சிவந்த செந்தா மரையில் வண்டுகள் பாடுவதனை நீர்வளஞ் சிறந்த சோழநாட்டின் அழகாகக் காண்கின்றார்; மறைந்த கடையெழு வள்ளல்களின் கலைவாழ்வினைப் புனைந் துரைத்துப் புலம்புகிறார். கலையழகில் ஈடுபட்டு முல்லைக் கொடியின் அழகு வாடாதபடி பெருந்தேரினைத் தந்தான் பாரி.

மயிலின் பல நிற ஒவியப் பேரழகு மழையால் கெடாதபடி போர்வையைத் தந்தான் பேகன், சிற்பியின்