பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

187

போல் இருத்தலும், வரகின் கதிர்கள் வாதிகள் கையில் இணைந்த விரல்கள் போல் தோன்றுதலும், முழவு போலப் பலாப்பழம் தொங்குதலும் குறித்துப் போகின்றான் இந்த மலைச்சாரலில் வாழும் நன்னனுடைய காவலாளரும், புரவலரும் பலவகை ஊனோடு சேர்த்து விருந்திடுகின்றனர் இப்பகுதியின் சிறப்பாவது வழியில் தோன்றும் இடை யூறுகளையும், அதற்கு முன் காவலாகச் செய்ய வேண்டுவனவற்றையும் விரித்துக் கூறும் முகத்தால் நாட்டின் வளத்தைச் சிறப்பித்தலேயாம். “வழி வழுக்கும், பாம்பிருக்கும், பல்லி பிடிக்கும் பொறியருக்கும்; ஆதலின் கையைப் பிடித்துக் கொண்டு கோலுான்றிச் செல்லுங்கள் வியத்தரு காட்சிகளைக் கண்டாலும் திடீரென மேல் நோக்கிப் பாராதேயுங்கள்” என்றெல்லாம் கூறிப் பாடுகின்றான்

கூத்தன் கவர்த்த வழியில் சரியான வழி இது எனப் பின்வருவோர்க்குத் தெரிவிப்பதற்காகப் புல்லை முடிந்து வைத்து நம் சாரணச் சிறுவர்கள் இன்று கைக்கொள்ளும் முறையை அன்றே இந்தப் பாடலில் பாடுகின்றான் வழியில் நன்னனுடைய காவலாளர்கள் வழிகாட்டியுடன் வருவார்களாம் வழியே போகும்பொழுது பலப்பல ஒசைகள் கேட்பதனை யெல்லாம் இலக்கியச் சுவை தோன்றக் கூத்தன் வாய்மொழியாகப் புனைந் துரைக்கின்றார் புலவர்.

கடாம் என்றால் மதம் மதம் பிடித்தபொழுது யானை முழங்கும் மதயானை பிளிறுவதுபோல் இந்த மலையும் பிளிறுகிறது அந்த ஒசையினையே மலைபடு கடாம் என்று, இப்பாட்டுக் கூறுகின்ற அழகிலே ஈடுபட்டுப் பிற்காலத்தினர் இந்த நுாலின் பெயராக வழங்கலாயினர் முள்ளம்பன்றியால் இறந்தவனுக்காக அழுதல், புலியால் தாக்கப்பெற்ற கணவன் புண்ணாற மகளிர் பாடுதல், மலைப் பிளவில் குட்டி விழுந்ததற்காகக் குரங்குகள் வருந்தி ஆரவாரித்தல், தேன்கூட்டை அழிக்கும் ஆரவாரம், ஏறு தழுவும் முழக்கம் என்று