பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

219

போலத் தோன்றினும் கயவரே ஆவர் இவர்களும் இல்லாது போவாரோ? ஈர்ங்கையும் விதிராது, மேவன செய்தொழுகி, நெஞ்சத்து அவலமின்றி, மறை ஒன்றும் காவாது வரும் இவர்கள் கொல்வார்க்கு மட்டுமே பயன்படுவர் ஆதலின் அச்சமே இவர்கள் ஆசாரம் சிறிது தன்னலமும் இவர்களை நல்லவர் ஆக்கலாம் இத்தகையார் அல்லாதாரே சிறந்த குடிகள் தம் குடி அல்லது குடும்பம் வாழவேனும் உழையாதான் சமுதாயத்திற்கு என வாழ்வது ஏது? குடி செய்வதனையே குறிக் கோளாகக்கொண்டால் குடும்பங்களையே அடிப் படையாகக்கொண்டு, அவற்றின் ஒற்றுமைக் காட்சியையே நாட்டின் சிறப்பாகக் கூறவேண்டும்

வயிறு வளர்த்தால் மட்டும் போதுமா? வாழ்க்கையின் சிறப்பு, உயர்ந்த குறிக்கோளின் அடிப்படையில் நடக்கும் குடிமக்கள் பண்பாடே ஆம் இங்கும் பொருளாதார அடிப்படையை மறக்க முடியாது செல்வம் என்றால் புதைந்து வைப்பதன்று தாமும் துய்த்துப் பிறர்க்கும் உதவி மகிழும் நன்மையுடையதே செல்வமாம் நன்றியில் செல்வத்தால் பயன் என்ன? ஏதமே பெரிதாம் எனவே ஈயாமையே அன்றிப் பிற மறுவிற்கும் நாணுகின்ற உள்ளமே கடிகளின் சிறப்பாம்

தீமை செய்யக் கூசும் நெஞ்சம் மக்கட்கு இயல்பாகப் படிந்துவிடுவதே சமுதாயத்தின் சிறப்பு அந்த நுட்ப நெஞ்சம் இல்லையானால் சமுதாயம் மரப்பாவைகளின் கூத்தாட்டாக முடியும் இந்த உட்கூச்சத்தாலன்றிக் குடிசெயலும், இரந்தோர்க்கு ஈதலும், உழவும், கயமை இல்லாத நிலையும் பிறப்பது ஏது? பண்புடைமை என்பது பாடறிந்தொழுகுதலாதலின் இதனால் அன்பும் நகையும் உலகில் வளரும்; நாடும் பயனெல்லாம் பெறும். இந்தப் பண்பின் விளைவே நாணுடைமை இக் குணங்கள் மக்கட்கு வழக்கமாகப் படியவேண்டுமானால், குடிமையின் சிறப்பாய்க் குடும்பங்கள் அமைய வேண்டும்