பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

செந்தமிழ் பெட்டகம்

ஒருவன் எதையேனும் நேராகவோ அல்லது கற்பனையாகவோ அனுபவித்திருக்கலாம். அதை மீண்டும் கற்பனை மூலம் தன்னுடைய உள்ளத்தில் நினைந்து மறுபடியும் அனுபவிக்கிறான். அந்த அனுபவத்தைப் பிறரும் அடையுமாறு செய்ய விரும்புகிறான், அதற்காக அவன் ஓவியனாயிருந்தால் வண்ணங்களையும், சிற்பியாயிருந்தால் கல்லையும்; உலோகத்தையும், கவிஞனாயிருந்தால் சொற்களையும் பயன்படுத்துவான். ஒருவன் தான் அனுபவித்ததைப் பிறரும் அனுபவிக்கும்படி சொற்களைக் கொண்டு செய்யும் கலையையே இலக்கியம் என்றும் கவிதை என்றும் கூறுவர். சாதாரணமாகக் கருத்துகளைக் கூறுவதற்குச் சொற்களை அகராதி கூறும் பொருளில் கையாண்டால் போதும். ஆனால் கவிஞன் சொற்களின் தொனிகளையும் ஒலி நயத்தையும் பயன்படுத்தித் தன்னுடைய நோக்கத்தைச் சாதித்துக் கொள்ளுகிறான்.

சொற்களின் கற்பனை நயமும் சந்தம் முதலிய ஒலி நயமுமே இலக்கியத்தின் உயிர் நாடிகள்; அவற்றின் வாயிலாகவே கவிஞனின் அனுபவம் கவிதையைப் படிப்பவர் அனுபவமாக ஆகின்றது. சந்த நயம் உண்டாக்குவதற்காக ஏற்பட்ட சாதனம் செய்யுள், யாப்பு இல்லாமலும் சந்த நயம் உண்டாகுமாறு செய்யலாமா தலால் கவிதை செய்யுள்நடையிலுமிருக்கலாம், உரைநடையிலுமிருக்கலாம்.

தமிழ் ஆசிரியர்கள் நூல்களைப் பாச் செய்யுள், நூற் செய்யுள், உரைச் செய்யுள் என்று மூவகையாகப் பிரித்துள்ளனர். பாச் செய்யுள் என்பதே இதுகாறும் கூறிய இலக்கியம் அல்லது கவிதையாகும். நூற் செய்யுளையும் உரைச் செய்யுளையும் கருத்துகளை வெளிப்படுத்தவே பயன்படுத்தினார்கள். ஆனால் இக்காலத்தில் உரைநடை என்னும் உரைச் செய்யுளும் இலக்கியத்தை உண்டாக்குவதற்கு உதவுகின்றது.