பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

செந்தமிழ் பெட்டகம்

மனவெழுச்சிகளை வெளிப்படுத்தும் கருவி :

தாய் மொழியைப் பிறரோடு பழகுவதற்கு வேண்டும் கருவியாகக் கொள்வதோடு தம் உணர்ச்சிகள், நுகர்வுகள், கருத்துகள் முதலியவற்றை வெளிப்படுத்தும் வாயிலாகவும் ஆக்கமுறச் செய்யவேண்டும் இவற்றை வெளியிடுவதால் அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி ஏற்படுவதோடு அவர்களுடைய மனம், ஒழுக்கம், மனவெழுச்சிகளாகிய உணர்ச்சுவைகள் முதலியவையும் பண்பட்டு வளர்ச்சியடைய இடமுண்டு மாணவர்களின் முழுவளர்ச்சிக்குத் தாய்மொழியே அடிப்படையானது என்னலாம் அதிலும், சிறப்பாகத் தாய்மொழியின் கண்ணுள்ள சிறந்த இலக்கியங்களும் அவர்களின் மன எழுச்சிகளைப் பண்படுத்தித் தனித்தன்மையை வளர்க்கும்

கற்கும் வாயில்:

அயல் மொழிகளின் வாயிலாகக் கலைகளைக் கற்கும்போது முதலில் அயல்மொழியை உணர்ந்து, அதன் பின்னர் அதன் வாயிலாகப் பொருளுணர்ந்து, அறிவை வளர்த்துக்கொள்வதில் காலம், முயற்சி, பணம் முதலியன மிகுதியாகச் செலவு ஆகின்றன தாய் மொழியிலேயே கற்று அறிவை வளர்த்துக் கொள்வதால் காலச்செலவும் பணச்செலவும் முயற்சியும் மிகுதியாகச் சுருங்கும் உறுதியான அறிவும் ஏற்படும் இதுவே இயற்கை முறையுமாகும்

இலக்கிய நயமுணர்ந்து இன்புறல்:

இலக்கிய நயமுணர்ந்து சுவைத்து இன்புறுதற்கும் தாய்மொழிப் பயிற்சியே சிறந்த கருவியாகும் இதுவே தாய்மொழிப் படிப்பின் மிகச் சிறந்த நோக்கமாகும் உயர்ந்த ஆசிரியர்களால் எழுதப்பட்ட நூல்கள் தொட்டனைத் தூறும் மணற்கேனிபோல் இன்பமுறும் ஊற்றுக்களாகும் இவற்றைப் பெற்று மகிழ்வது மக்களின் தலையாய கடனாகும்