பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

107

ராசாதிராசன் விக்கிரமார்க்கன் கொலு வீற்றிருக்கிற விதம் காண்க” என்று கட்டியம் கூறுவான். விக்கிர மார்க்கன் விருதுகளையெல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வரும்போது பின்பாட்டுக்காரர்கள், “ஆஹா “ அல்லது “ஒஹோ” என்று கூவிக் கொண்டு வருவார்கள்.

இந்த நாடக நூல்களில் அங்கம், களம் அல்லது காட்சி என்னும் பிரிவுகளே இல்லை. அவற்றிற்குப் பதிலாகக் காட்சிகள் மாறும் போது கட்டியக்காரன் ‘நள மகாராஜா ருது பர்ணனுடன் சூதாடுகிற விதம் காண்க; அரிச்சந்திர மஹாராஜா சுடலைக் காக்கிற விதம் காண்க; சந்திரமதி புலம்புகிற விதம் காண்க' என்று சமயோசிதம் போல் தெரிவித்துக் கொண்டு வருவான். இந்நாடகங்களில் சமஸ்கிருத நாடகங்களிலிருப்பது போல் கடைசியில் பரதவாக்கியம் கிடையாது. அதற்குப் பதிலாகப் பொதுமங்களப் பாட்டுகள் பல நாடகங்களில் வரையப்பட்டிருக்கின்றன. இவைகளில் வரும் பாட் டுக்குத் தரு என்று பெயர்.

மேற்சொன்ன நாடகங்கள் எல்லாம் தெருக் கூத்துக்களாக ஆடப்பட்டன என்பதற்குச் சந்தேகமில்லை. தெருக்கூத்து என்பது நாடகமேடை இல்லாமல் நடிகர் தெருக்களிலும், வெட்டவெளி நிலங்களிலும், களத்து மேடுகளிலும் ஆடப்பட்டதாம். இவை பெரும்பாலும் கல்வி அறிவு அதிகமாயிராத பொது மக்களால் ஆடப்பட்டவைகளாகும். இவற்றில் பெரும்பாலும் பாட்டும், அதற்குத் தக்க ஆட்டமும் இருந்த போதிலும் நாடக பாத்திரங்கள் வசனங்களையும் கொஞ்சம் அதிகமாகக் கையாளத் தலைப்பட்டனர் எனலாம். முக்கியமாகத் தொப்பைக் கூத்தாடி என்னும் அகசியக்காரன் வசனமே பேசுவான். இப்படிப்பட்ட கூத்துக்கள் கிராமாந்தரங்களில் இன்னும் நடைபெற்று வருவதைக் காணலாம்.