பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

செந்தமிழ் பெட்டகம்


இத் தெருக்கூத்துக்கள் இரவில் சுமார் பத்து அல்லது பதினொரு மணிக்கு ஆரம்பமாகும். டிக்கட்டுக்கள் இல்லை. முதலில் துதிப் பாடல்கள் எல்லாம் ஆவதற்கு ஒரு மணி காலமாவது ஆகும். பிறகு கோமாளி (தொப்பைக் கூத்தாடி) வந்து ஆடுவான், இதன் பின் கட்டியக்காரனுக்கும் இவனுக்கும் நடக்கும் தர்க்கத்தினால் இன்ன நாடகம் நடக்கப் போகிறதென மக்கள் அறிந்துகொள்வார்கள்.

தெருக் கூத்தாடிகள் ராஜ வேஷம், ஸ்திரீ வேஷம், மந்திரி வேஷம் என்று சில வேஷங்களையே தரித்துக் கொள்வார்கள். அந்த உடைகளில் எந்த நாடகம் வேண்டுமென்றாலும் ஆடி விடுவார்கள். அது விக்கிரமாதித்தியன் கதையாயிருந்தாலும் போஜராஜன் சரிதையாயிருந்தாலும், சுபத்திரை கலியாணமாயிருந்தாலும் அதே உடைதான். நாடகம் தொடங்கியவுடன் ஒவ்வொரு நாடக பாத்திரம் வரும் போது வெள்ளைத் துணி திரையாகப் பிடிக்கப் படும்; அதன் பின் இருந்து அப்பாத்திரம் முதலில் பாடிவிட்டுப் பிறகு அத்திரையை நீக்கிக் கொண்டு சுற்றிச் சுற்றி ஆடுவான். இவன் பாடும் போதெல்லாம் பின்பாட்டுக்காரர்கள், பெருத்த சப்தத்துடன் அதே பாட்டைப் பாடுவார்கள். வெளிச்சத்திற்காக இரண்டு பெரிய பந்தங்கள் பிடிக்கப்படும். இது கிராம வண்ணான் வேலையாகும். இடையிடையே கோமாளி மக்கள் நகைப்பதற்காக ஹாசியம் செய்வான்.

ஒவ்வொரு நாடகத்திலும் குறம் சொல்லும் குறத்தி, வெட்டியான் முதலிய சில்லறை வேஷங்கள் வரும். நாடகம் முடிவதற்கும், பொழுது விடிவதற்கும் சரியாகப் போகும். நாடகம் முடிந்தவுடன் அதே உடைகளில் வேஷதாரிகள் கிராமத்திலுள்ள வீடு தோறும் போய்க் காசோ, அரிசியோ வாங்குவார்கள். இதுதான் அவர்கள் நாடகமாடியதற்குப் பெறும் ஊதியம்.

பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ் நாடகமானது மிகுந்த இழிந்த நிலையை அடைந்து