பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



116

செந்தமிழ் பெட்டகம்


களில் நட்சத்திரங்களாகத் தோன்றினர். இதற்கு முக்கிய காரணம் சினிமாக்களில் ஆடுவதனால் அவர்களுக்கு, நாடக மேடையில் ஆடுவதை விட ஊதியம் அதிகமாகக் கிடைப்பதேயாம். இதனால் தமிழ் நாட்டிலிருந்த நாடக அரங்கங்குகளெல்லாம் சினிமா அரங்கங்களாக மாறிவிட்டன. சென்னையிலும், மற்றத் தமிழ்ப் பகுதிகளிலும் தமிழ் நாடகங்களாட மேடையே கிடைப்பது அரிதாகி விட்டது. தமிழ் நாடகம் அருகத் தொடங்கியது. பல தமிழ் நாடகக் கம்பெனிகள் மூடப்பட்டன. அமெச்சூர் சபைகளும் நாடகங்களை அடிக்கடி ஆடுவதைக் கைவிட்டனர். அமெரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களிலும் இப்படித்தான் மாறியிருக்கிறது. இருந்தும், அக்கண்டங்களிலுள்ள கலை ரசிகர்கள் இப் பேசும் படங்கள் நாடக மேடையை முற்றிலும் அழிக்க முடியாது என்று கருதுகின்றனர். சினிமாக்கள் எவ்வளவு தான் தங்கள் புதுமையால் கலைஞருடைய மனதைக் கவர்ந்த போதிலும் பேசும் படங்களில் நடிகர்களுடைய நடிப்பைக் கண்டு, அவர்களது சங்கீதத்தைக் கேட்டு மகிழ்வதை விட அந்த நடிகர்களையே மேடையின் மீது நேரில் பார்த்தும் கேட்டும் அனுபவிக்கும் ஆனந்தம் குறையாது என்றெண்ணுகின்றனர்.

அதற்கேற்றவாறு இன்று தமிழ் நாட்டிலே நாடகத்திற்கு ஒரு புது ஆதரவு ஏற்பட்டுக் கொண்டி ருப்பதை நாம் காண்கிறோம்.

தமிழ் நாடக இலக்கியம் தமிழ் இலக்கியம் இயல், இசை, நாடகம் என மூன்று வகைப்படும். ஆனால் இவ்வாறு கூறும்போது நாடகம் என்பது கதை தழுவின கூத்து என்று சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கூறுவதைக் குறிக்கும். ஆயினும், ஆயிரம் ஆண்டுகட்கு முன்னமேயே நாடகங்கள் வடமொழியில் இயற்றப்பட்டிருப்பதால் தமிழிலும் பல தோன்றியிருத்தல் வேண்டும் என்று