பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

செந்தமிழ் பெட்டகம்


இயற்றி வந்த நூல்களை எழுதுவதும், திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக இருந்த சுப்பிரமணிய தேசிகரிடம் பழகுவதும், அந்த மடத்துக்கு வரும் தமிழ்ப் புலவர்களிடத்திலும் வடமொழி வாணரிடத்திலும் சங்கீத வித்துவான்களிடத்திலும் நெருங்கிப் பழகுவதும் போன்ற செயல்களால் இவருக்குப் பலவகையான அனுபவங்கள் கிடைத்தன.

மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மறைவுக்குப் பின் திருவாவடுதுறையாதீன கர்த்தராகிய சுப்பிரமணிய தேசிகரிடமே இவர் பாடம் கேட்டுக் கொண்டும் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லியும் வந்தார். இப்போது கும்பகோணம் அரசினர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்த தியாகராச செட்டியார் தாம் ஒய்வு பெற வேண்டிய சமயம் வந்தமையால் இவரைத் தமிழ்ப் பண்டிதராக நியமிக்குமாறு சிபாரிசு செய்தார். 1880 பிப்ரவரி மாதம் முதல் இவர் அரசினர் கல்லூரித் தமிழாசிரியராக வேலை பார்க்கத் தொடங்கினார் அப்போது இவர் தம்முடைய அறிவாற்றலும் பாடஞ் சொல்லும் திறமையாலும் மாணாக்கர்களின் உள்ளங்களைக் கவர்ந்தார். மற்றப் பாடங்களைக் கற்பிக்கும் பேராசிரியர்களுக்குள்ள மதிப்பு இவருக்கும் உண்டாயிற்று.

அக்காலத்தில் கும்பகோணத்தில் ஜில்லா முன்சீபாக இருந்த சேலம் இராமசுவாமி முதலியார் இவரிடம் சீவகசிந்தாமணியைப் பாடம் கேட்கத் தொடங்கிப் பிறகு அதைப் பதிப்பிக்க வேண்டும் என்று தூண்டினார். தமிழ் நூற்பதிப்புத் தொண்டை மேற்கொண்ட இவர் ஜைன நூலாகிய சிந்தாமணியை ஆராய்ந்தார். ஜைனப் புலவர்களிடம் ஜைன சமய உண்மைகளைத் தெரிந்து கொண்டார். 1887ஆம் ஆண்டு சீவகசிந்தாமணியை நச்சினார்க்கினியர் உரையோடு வெளியிட்டார். அந்தப் பதிப்பு இவருக்குப் பெருமதிப்பை உண்டாக்கியது.