பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

செந்தமிழ் பெட்டகம்



இந்நூலுக்கு இப்பெயரை இறைவனே சூட்டினன் என்று கருதும்படி, “திருப்புகழ் விருப்பமொடு செப்பென எனக்கருள்கை மறவேனே” என அருணகிரியார் கூறுகின்றார்.

திருப்புகழின் நடைச்சிறப்பும் பொருட்சிறப்பும்: சிவ பிரானுக்குத் தேவார திருவாசகங்கள் எவ்வளவு உகந்த துதி நூலாயிருக்கின்றனவோ அதுபோல முருகக் கடவுளுக்கு மிகவும் உகந்த நூல் அருணகிரியார் அருளிய இத்திருப்புகழ் என்னும் செஞ்சொற் பிரபந்தம் “வாக்கிற் கருணகிரி” என்னும் வழக்கு, திருப்புகழின் நடைச் சிறப்பையும் பொருட்சிறப்பையும் கருதி எழுந்ததாகும்.

வாக்கின் அங்கங்களாகக் கனிவு, தாக்கு, நோக்கு, நயம், சொல்லுறுதி என்பன கூறப்பட்டு, அவ்விசேடங்களுள் ஒவ்வொன்றே தெய்வப்புலவர்களாம் நால்வர் வாக்கிலும், நக்கீரர் வாக்கிலும் மேம்பட்டு விளங்க மேற் கூறிய அங்கங்கள் யாவும் பிற நற்பண்புகளும் பிறங்க அமைந்துளது அருணகிரியாரின் வாக்கு என்பதைப் புலப்படுத்தவே வாக்கிற் கருணகிரி என அடை மொழியிலாது கூறப்பட்டுள்ளது. பலவகைப் பாக்களுள் சந்தப்பாக்களே செவிக்கு மிக்க இன்பம் பயப்பனவாதலின் இறைவனுக்குச் சந்தப்பா வகை உகந்ததாகும். தம்மைக் காக்கும் பொருட்டு எமனை உதைத்த இறைவன் திருவடியை மார்க்கண்டேயர் சந்தப்பாக்களால் துதித்தனர் என்று புராணங் கூறும்.

அருணகிரியார் வாழ்ந்திருந்த 15 ஆம் நுாற்றாண்டு, வடசொற்கள் தமிழிற் பெரிதும் நுழைந்த காலமாகும். ஆதலால் அருணகிரியார் நடையிலும் வடமொழி நிரம்பக் கலந்துளது. மேலும் அத்தகைய நுழைவு அந்த வகைக்கு மிகவும் பயன்பட்டதாய் அருணகிரியாரின் வாக்குக்கும் ஒரு தனிப் பொலிவையூட்டி, நடைக்கு அழகையும் சிறப்பையும் தந்துள்ளது. தமிழ் மொழியோ, வடமொழியோ பெரியோர் திருவாக்கில் வந்தால் அதில் ஒரு தனி அழகு புலப்படும்.