பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

147


வதைச் சார்ந்திருக்கிறது. அதிருஷ்டமும் செயப்படு பொருள் போல வினையிடத்தே தோன்றுவதால் தமிழ் நூலார் கூறும் வினைக்கண் அடங்கிநிற்கும்.

ஒருவினை (அதிருஷ்டம்) பக்குவப்படுவதற்குள் வேறுபல வினைகள் வந்து சேர்ந்துவிடும். இவற்றில் பக்குவப்பட்டவை இப்பிறப்பிலேயே பயனை நல்கும். எஞ்சியவற்றை நுகர்வது குறித்து மறுபிறப்பு வந்து சேர்கிறது. வினைப்பயன்களின் கூறுபாட்டிற்கேற்ப மறுபிறப்பில் புல் முதல் தெய்வமீறாகப் பல்வகையுடம்புகள் தோன்றுகின்றன. இதனால் எடுக்கும் பிறப்புகளும் பலவாகின்றன.

பிறவிதோறும் எடுக்கும் உடம்பு கருவியாகக் கொண்டே வினைப் பயன்களை நுகரவேண்டும். நுகருந் திறம் உடம்பு தோறும் வேறுபடும். அதற்கேற்பச் சில பயிற்சிகள் உண்டள்கிக் குணம் போல ஒன்றிவிடும். அவையே அவ்வுடம்புகருவியாக வினைப்பயன் நுகர்வதற்கு வாயிலாய்ச் செயற்படுகின்றன. இவற்றை வாதனை என்பர். தமிழ் நூல்கள் வாதனையை அவா என்று குறிக்கும். பக்குவமெய்தி நிற்கும் வினைப்பயன் வாதனையின் வாயிலாக உயிரை வந்து அடைகிறது. வினைகள் பக்குவப்படுவதற்குரிய காலமும் பயன்களின் அளவும் அவ்வினைகளின் வன்மைகளைச் சார்ந்திருக்கின்றன. சில வினைகள் பக்குவமுற்றுப் பயன் நல்குங்கால் வேறான சில வினைகளும் பக்குவமெய்தி நிற்கலாம். அற்றுள் வலியதனால், மெலியது பக்குவமெய்திருப்பினும் பற்றுக்கோடாகிய வாதனை யில்லாமையால் கெட்டழியும். சீவன் முத்தன் ஒருவன், தன் உடம்பளவாய் நிற்கும் வாதனையைப் (அவாவை) பற்றி வந்து அடையும் வினைப்பயனை நுகரும்போது, பக்குவ மெய்தியிருக்கும் ஏனை வினைகட்குப் பற்றுக்கோடாகாதபடி வாதனைகளைத் தன் பால் நிலையா வண்ணம் அறுத்து விடுகின்றான். அதனால் அவன் வினைத் தொடர்புகளின் நீங்கி வீடுபெறும் திறம் பெறுகின்றான்.

நம் நாட்டு அறிவு நெறிச் சமயங்கள் பலவும் இறைவன் உலகம் உயிர் என்ற மூன்று பொருள்களையும் கண்டிருந்தன. கடவுள் என்ப தொன்றுண்டு என்பதைத் தொடக்கத்தில் வற்புறுத்தாத நையாயிகரும் சாங்கியரும் பின்னர் அதனை