பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

251


நெறியினைப் பரப்பியதனால், இவர்களது சமயமாகிய சைன சமயம் இவர்கள் பெயரால் சமண சமயம் என வழங்கப்படுவதாயிற்று.

உ. சமண முனிவர் வரவின்கண் தமிழ் இருந்த நிலைமை

மிழ்நாட்டில், ஆதியில் தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர்; அவர்கள்பால் தனித் தமிழே நிலவியிருந்தது. பின்னர், வட நாட்டு மக்கள் தமிழ்நாட்டிற் குடி புகுந்தனர். அவர் வழங்கிய வடமொழியும் அவரோடு போந்து தமிழ்நாட்டில் இடம் பெற்றது. வடவரும் தமிழரும் வாழ்க்கையில் ஒருங்கு இயைந்து உலவத் தொடங்கியதும், வடமொழியும் தமிழிடைக் கலந்து வழங்கப்பெறுவதாயிற்று. சமணர் தமிழ்நாட்டிற் புகுந்த காலத்துத் தமிழரிடை வடவர் வழக்கும், வடமொழி வழக்கும் நிலவியிருந்தன. தமிழ் மக்களின் மனப்பான்மையும், வடவர் வழக்கினையும், வடமொழி வழக்கினையும் மேற்கொண் டொழுகுதற்கண் பேரார்வமும், பேரூக்கமும் கொண்டு இருந்தது.

நம் நாட்டிற்குப் புதியராய், புது வழக்கும், புது வொழுக்கும், புது மொழியும் உடையராய்ப் போந்த மேனாட்டு மக்களின் கூட்டுறவால், நம் நாட்டவர்க்கு அவர் மொழி வழக்கினும், நடையொழுக்கினும் வேட்கையும் விழைவும் பெருக, அதனால் நம் நாட்டு மொழி நிலை தாழ்வுற்றதன்றோ? அங்ஙனமே, வடவர் கொணர்ந்த மொழி வழக்கினையும், நடையொழுக்கினையும் கண்ட தமிழர் அவற்றின்பால் எழுந்த வேட்கையால், தமிழ் வளர்ச்சியிற் கருத்தூன்றாது தாழ்ந்தனர். வடவரது வைதிக சமயக் கோட்பாடுகளை மேற்கொண்டனர். வடவரது வடமொழி உயர்ந்தோர்க்கல்லது உணர்த்தப்படா தென்னும் வடவர் வகுத்த முறையால், இக்காலத்து ஆங்கிலம் போலத் தமிழரிடம் முதலிடம் பெறாதாயிற்று. ஆனால், வடமொழியைத் தமிழொடு விரவிப் பேசும் நெறியினை மட்டும் கைவிடாது பேணிவந்தனர். அதனால், வடசொல் விரவாத தனித் தமிழ் நூல்கள் அருகின; வடசொல் விரவிய நூல்கள் கூடிய அளவிற் பெருகின. இலக்கணங்களும் வட சொற்கள் தமிழொடு