பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18. சமண முனிவர் தமிழ்த் தொண்டு

நம் தமிழ் மொழியின் இலக்கண இலக்கிய நெறியின் வளர்ச்சியினை வரலாற்று முறையால் ஆராய்கின்றவர், இவ்வளர்ச்சி குறித்துச் சமண முனிவர் செய்துள்ள தொண்டுகளைக் காணாதுபோக முடியாது. தமிழ் வளர்ச்சிக்கெனச் சிறந்த தொண்டு புரிந்து தமிழ் மக்களைவிடச் சமண முனிவரே தலை சிறந்து நிற்கின்றனர் என்று பலரும் கூறுகின்றனர். அவர் செய்த தொண்டினை ஒரு சிறிது ஆராயின், அவர் தொண்டு முற்றும் தம் சமய நெறியினைத் தமிழ்நாட்டில் நிலைபெறுவித்தற்குச் செய்த சமயத் தொண்டாகவே தோன்றுகின்றமையின், அதனைப் புலப்படுக்கும் குறிப்பால் இக்கட்டுரை எழுதப்பெறுகின்றது.

க. சமண முனிவர் வரலாறு

மண முனிவர் என்பவர் சைன சமய வொழுக்கத்தை மேற்கொண்டு, துறவிகளாய், நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் சிறந்து, வினைத்தொடர்பு கெடுமாறு முயலும் சான்றோராவர். இது பண்டைக் காலத்தில் வடநாட்டில் தோன்றிய புதுச் சமயம் என்று சிலர் கூறுவர். சமயக் கலையில் வல்லுனராகிய இராதாகிருட்டினன் என்னும் பேராசிரியர், “இஃது இந்திய நாட்டிற்கே உரித்தாகிய வைதிக சமயத்திலிருந்து புதிதாய்க் கிளைத்த சமயம்" என்கின்றார். இச் சமயம் வடநாட்டில் சைன சமயம் என்றும், தென்னாட்டில் சமண சமயம் எனவும் வழங்கப்பட்டது. சைனருள், இல்லறத்தோர் சிராவகர் என்றும், துறவு பூண்டு இன்பத்து விருப்பும், துன்பத்து வெறுப்பும் இலராய் இரண்டனையும் ஒப்ப மதித்தொழுகும் சான்றோர் சமணர் எனவும் கூறப்பவர். இவர்கள், புத்த சமயத்தை நாடெங்கும் பரப்புதற்குரிய பெரு முயற்சியினைச் செய்த பேரரசப் பெருந்தகையாகிய அசோக மன்னராலும் நன்கு மதிக்கப் பெற்றவர்கள். இச்சமணர்கள் நம் தமிழ்நாட்டிற் புகுந்து தம் சமய-