பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

253


“அறங்காட்டும் அமணரும் சாக்கியரும்", "கடுமலி உடலுடை அமணரும் கஞ்சியுண் சாக்கியரும், இடும் அறவுரை" என ஞானசம்பந்தப் பெருமான் கூறியருளியிருக்கின்றார். இவற்றால், தேவார காலத்திற்கு முன்னர் இருந்த சமண முனிவர் தம் சமய அறங்களை மக்களுக்கு உணர்த்துவதே தமது கடனாகக் கொண்டிருந்தனர் என்பது தெளிய விளங்குகிறது. அக்காலத்திற்கு முன்னர் இருந்த தமிழ் நூல்களை நோக்கின், அவற்றுட் சமண முனிவர் செய்தனவாகக் காணப்படுவன யாவும் அறநூல்களேயாக இருக்கின்றன. நாலடியார், அறநெறிச்சாரம், சிறுபஞ்சமூலம் முதலிய பலவும் அறம் கூறுவனவேயாகும்.

அக்காலத்தே அவர்கள், வரலாறு கூறும் தமிழ் இலக்கியங்கள் மிகச் செய்திலர் ஒன்றிரண்டு செய்தாராயினும் அவை தமிழ் வளங் கெழுமியவாய்த் தமிழர் மனத்தைக் கவ்வுவனவாய் இல்லை. அவர்கள் உலக வாழ்க்கையில் வெறுப்பும், துறவு நெறியில் விருப்பும் மிக்கு இருந்தமையின் தமிழர் வாழ்க்கையில் நிலவிய அகப்பொருள் நலங்களும், புறப்பொருள் துறைகளும் நெடுநாள்காறும் அவர்கள் மனத்தில் இடம்பெற்று, அவர்கள் அறிவை ஏவல்கொள்ளவில்லை. அதனால், அவர்கள் தமிழ் மொழியின் இலக்கணத் துறையிற் புகுந்து, அதன் பகுதிகளுள் ஒன்றாகிய செய்யுளியலில் பெருந்தொண்டு புரிவாராயினர்.

கற்றவர் கல்லாதவர் என்ற இருதிறத்தார்க்கும் அறவுரை வழங்குமிடத்தும் உரையும் பாட்டுமே மிக வேண்டற்பாலன. இவற்றுள் முன்னதைவிடப் பின்னையதே கல்லாதவரையும் எளிதிற் பிணிக்கும் வாய்ப்புடையதாகும். ஆகவே, அதற்குரிய செய்யுளியலில் பெரும்பாடுபட்டுப் பல புதுநெறிகளையும் இயல்களையும் காண்பாராயினர். யாப்பருங்கல விருத்தியுரையிற் காட்டப்பெற்றுள்ள செய்யுளியல் நூல்களுட் பல, சமண முனிவராற் செய்யப் பெற்றிருப்பதற்கு இதுவே காரணமாகும். இசை நூலும் நாடக நூலும் காமம் பயக்கும் சிறுமையுடையவை என்பது அம்முனிவர்களின் கருத்து, அதனால் அத்துறையை நெகிழ்ப்பதோடு அவ்விசை நாடகங்களில் பற்றுண்டாகாமையும் வளர்த்து வந்தனர். தமிழர் தாமும், தம் தமிழையே மறந்து, வடநூற் கதைகளிலும், வடவர் வழக்க வொழுக்கங்களிலும் வேட்கை மீதூர்ந்து நின்றமையின், அவை பேணற்பாடின்றி இறந்தன.