பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி
59
 


வினைமேற்செல்வதைக் கைவிடுவரே. அதனால் ஏதமன்றோ விளையும், ‘ என்றனள். அது கேட்ட அந்நங்கையும் தேறி அவன் பிரிவை ஆற்றித் தனக்குரிய அறத்தினையும் ஆற்றிவந்தனள்.

இச்சிறிய பாட்டினைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் சான்றோராவர்.

இவ்வாறு வினைமேற்செல்ல நினைந்த தலைமகன் ஒருநாள் மாலைப்போது வரக்கண்டு, ‘ஆ. இப்போது நம் காதலி நம் மனையகத்து விளக்கேற்றி அதன் முன் நின்று, இன்னும் காதலர் வந்திலரே என்று நினைக்கும் போது அன்றோ?’ என்று தனக்குள் நினைத்தான். நினைத்தவன், இம்மாலை,

‘உள்ளினேன் அல்லனோ யானே, உள்ளிய

வினைமுடித் தன்ன இனியோள் மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே.”

- - நற்றிணை 3

எனத் தனக்குள் நினைந்து இனைந்தான் என இளங்கீரனார் கூறியுள்ளார். இவ்விரு செய்யுட்களையும் நோக்குவோமாயின், நமக்கு ஒர் உண்மை புலப்படும். அஃதாவது, ஓர் ஆண் மகனுக்கு அவன் செய்தற்குரிய வினைதான் உயிர்; அதனை முடித்தவழி யுளதாகும் இன்பம் காதலின்பம் போல்வது என்பதாம்.

வினையென்பது நாம் செய்யும் செய்கையாகும். ஒவ்வோரு யிரும் உலகில் தோன்றும்போதே வினை செய்வதற்கென்றே பிறக்கின்றது. வினையே ஒருவன் எய்தும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமாவது. இன்பத்தையே எவ்வுயிரும் பெற விரும்பும்; துன்பத்தை விரும்பும் உயிர் எதுவுமில்லை. துன்பம் என்ற சொல்லைக் கேட்கும்போதே நம் உள்ளம் சுளிக்கும்; சொல்லுதற்கும் நாக்குக் கூசும். இன்பத்தைத் தரும் வினையே யாவரும் விரும்பும் தொழிலாகும். அதனால்தான் இன்பம் தரக்கூடியதனை நல்வினை, நற்செய்கை என்றும், துன்பம் தருவதனைத் தீவினை, தீச்செய்கை என்றும் சொல்லுகின்றோம்.

இனி இவ்வினையைச் செய்யும்பொழுது நம் உடலும் உயிரும் பெரிதும் பாடுபடுகின்றன. இவ்விரண்டும் ஒருங்கே கூடிச் செய்யாதவழி, எந்தத் தொழிலும் நடைபெறுவது இல்லை. எத்தொழிலைச் செய்வதாயினும் இவை உழைக்க வேண்டி