பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

செம்மொழிப் புதையல்


யிருக்கின்றன. உயிர் உடலொடு கூடியிருப்பது இவ்வுழைப்புக்கே; இவ்வுழைப்பால், உயிர் உடல்படும் துன்பமனைத்தையும் தான் படுகிறதென்றாலும், உயிர்க்கு உடலின்மேல் உள்ள பற்றினால் உழைக்க உழைக்க, அதற்கு அதன்மேல் பற்று மிகுகின்றது; "துன்பம் உழத்தொறும் காதற்று உயிர்"எனத் திருவள்ளுவர் கூறுகின்றார். எனவே, உடலோடு கூடி வாழும் ஒவ்வோருயிர்க்கும் உழைப்பு இயல்பாக அமைந்திருப்பதை அறிகிறோம். ஆனால், இவ்வுயிர்களுள் மக்களுயிர்மட்டில், ஏனை உயிர்களை விடச் சிறிது மேம்பட்டதாகும். தன் உழைப்பால் ஆண்டவன் படைப்பில் உள்ள ஏனை உயிர்களையும் உயிரில் பொருள்களையும் முறையே அடிமையாகவும் உடைமையாகவும் ஆக்கிக் கொள்ளற்கு வேண்டிய உரிமை மக்களுயிர் பெற்றிருக்கிறது. ஆதலாற்றான் இன்று மனிதன் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய பூதம் ஐந்தும் தான் விரும்புமாறு அமையச் செய்கின்றான். நிலத்திற்குள் நுழைந்து குடைந்து செல்கின்றான். நீரின் மேலும் கீழும் நிமிர்ந்து செல்கின்றான்; காற்றை ஏவல் கொள்ளுகின்றான்; விசும்பில் பறந்தேகுகின்றான். சுருங்கச் சொன்னால், மனிதன் ஆண்டவனுக்கு அடுத்தபடியாக விளங்குகின்றான் என்னலாம்.

மனிதன் இத்துணை ஏற்றமுடையவனாக இருத்தற்குரிய உரிமை அவன்பால் நிலைத்திருக்க வேண்டுமாயின், அவன் சலிப்பின்றி உழைத்தல் வேண்டும். உழைப்பினால் அவன் உடல் தூய்மையடைகிறது. அதனால் அவன் உள்ளம் ஒளிபெறுகிறது; அப்போது ஆண்டவன் அவற்கு அருளியுள்ள உரிமை கதிர்விட்டுத் திகழ்கின்றது. அதுவழியாக அவன்பால் உயரிய எண்ணங்களும், உலவாத இன்பமும் உண்டாகின்றன. மக்களுட் சிலர், அவ்வுரிமையைக் காத்துக்கொள்ளும் வலிகுன்றியிருக்கின்றனர்; உரிமையை நிலைப்பிக்கும் உழைப்பினை நெகிழ்த்துச் சோம்பலுறுகின்றனர். சோம்பல் உடலைக் கெடுக்கின்றது; அதனால் உயிர் மடங்குகின்றது; உரிமை நிலவும் உள்ளம் மடிகின்றது. ஆகவே, சோம்பல் மடிமைக்கு உயிரை இரையாக்கி, உள்ளத்தே இருளையும் உயிர்க்கு இறுதியையும் விளைவிக்கின்றது. ஒரு பெரியாரது உடன்பிறந்தார் இறந்துபோனார் என்பது கேள்வியுற்று, வேறொரு பெரியார் அவரை நோக்கித் "தங்கள் தம்பி எவ்வாறு இறந்தார்?" என்று கேட்டதற்கு, அவர், "அவன்