பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

செம்மொழிப் புதையல்


மாண்புடை மக்காள்! உழைப்பே ஆண்டவன் உருவெனவுணர்மின். அதற்கு அழியாது ஆற்றலே அவனது திருப்பணியென அறிமின்; பரந்த உலகில் சிறந்தோங்கிய பெருமக்கள் கண்டுணர்ந் துரைத்த முதுபொருளும் இதுவேயாம்.

உழைப்பினை வெறுத்து நொந்துரைக்கும் ஒருவன் உளனோ? உளனாயின், அவனை அது செய்யவேண்டாவென உரைமின். ஒடுங்கிக்கிடக்கும் அவன் முன் சென்று, "அன்ப, ஒடுங்குதல் ஒழிக. இதோ, உன்போல் உழைத்த தோழர்கள் உயர்நிலை யுலகத்தில் இன்பஞ் சிறந்து இனிதே உறைகின்றனர். அவர்களன்றோ ஆங்கே இன்புறுகின்றவர்; பிறர் எவரும் இலரே இந் நிலவுலகினும், உழைப்புநலத்தால் உயர்ந்த வரன்றோ, மக்கள் மனநிலத்தில் மன்னி, வானவரும் முனிவரரும் போலக் காலங்கழியினும் கோலங் கழியாது என்றும் நின்று நிலவுகின்றனர்", எனத் தெருட்டித் தெளிவுறுத்துமின்.