பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

1038. பொருத்தமானதும், பொருத்தமில்லாததும்

இனி, இத்தகைய உள்ள உறுதி, சில செயல்களை மேற்கொள்ளுவதால் மேலும் மேலும் வலிவு பெறும். வேறு சில செயல்களைச் செய்வதால் சிறிது சிறிதாகக் குறைந்து மெலிவு பெறும் என்னும் ஓர் உண்மையையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும். எந்தச் செயல் நம் உள்ளத்தை மேலும் மேலும் வலிவுபெறச் செய்கிறதோ, அந்தச் செயலே நமக்குப் பொருத்தமான செயல் என்று கொள்ள வேண்டும். அந்தச் செயலையே நாம் தொடர்ந்து செய்யவும் வேண்டும்.

இனி, எந்தச் செயலால் நம் உள்ளம் படிப்படியாக உறுதி தளர்ந்து வருகிறதோ, அந்தச் செயலை நாம் உடனே கைவிட்டு விடவேண்டும். அதை நினைக்கவும் கூடாது என்பார் திருவள்ளுவர். இதுபோலும் கூரிய நுட்பங்களை நாம் திருக்குறள் தவிர வேறு எந்த நூலிலும் பார்க்க இயலாது.

இந்த உண்மையைக் கூறும்போது, திருவள்ளுவர் நமக்கு அது விளங்க வேண்டும் என்பதற்காக வேறொரு நமக்கு நன்றாய் விளங்கும் ஒர் உண்மையைப் பொருத்திக் காட்டுவார்.

நாம் நல்ல நிலையில் அஃதாவது இன்பமாகவும், மகிழ்வாகவும் இருக்கின்ற பொழுது சில நண்பர்கள் வந்து, நம்மோடு பொருந்தியிருந்து, நட்புப் பாராட்டித் தாங்கள் உண்மையான நண்பர்கள் போல் நம்மோடு மகிழ்ந்திருப்பர். ஆனால் துன்பம் வரும்பொழுது அவர்கள் நம்மை விட்டு ஏதோ காரணம் கூறிவிட்டு, அந்தத் துன்பத்தில் பங்கு கொள்ள மாட்டாதவர்களாய், விலகி விடுவார்கள். அந்த நிலையில் நம் உள்ளம் அவர்களை நினைந்து மிகவும் வருந்தும் அது நாம் பெற்ற துன்பத்தை விட மேலும் துன்பமாக இருக்கும். அபொழுது நம் உள்ளம் சிறுத்து விடும். ஊக்கம் குறைந்துவிடும். அத்தகைய நண்பர்களை நாம் உடனே விட்டு விலகிவிட வேண்டும். அவர்கள் நட்பை நாம் மேலும் விரும்பக்கடாது. அதுபோலவே நம் உள்ள உறுதியைக் குலைக்கின்ற சிறுக்கச் செய்கின்ற - தாழ்ச்சியடையச் செய்கின்ற - செயல்களை நாம் விரும்பக் கூடாது. அவற்றை முன் தெரியாமல் மேற்கொண்டிருந்தாலும் தெரிந்த பின்னாவது அவற்றைத் தவிர்த்துவிட வேண்டும் என்பார், திருவள்ளுவர்.

உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

இதில் உள்ளம் என்பது ஊக்கம், உறுதி. நம் உள்லத்தின் உறுதியைக் குறைக்கின்ற செயல்களை நினைக்கவும் வேண்டா என்கிறார். இதற்குப் பொருள் எழுதுங்கால் பரிமேல் அழகர், "உள்ளம் சிறுகுவன ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும், பயனில்லனவும் ஆம்" என்பார்.