பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

225



அவர் போல், மெலியவராகிய தாமும் முன்னேற, இஃதும் ஒரு வழியாக உயிர்களின் இயங்கியல் கூறாக அமைந்திருக்கிறது. உலகில் இரண்டு மாந்தர்களே எஞ்சியிருந்தாலும் ஒருவரை ஒருவர் அழிக்கவே முயற்சி செய்வர். தம்மைப்போல் இன்னொருவர் இருக்க அல்லது இயங்க, அவருக்குப் பிடிப்பதில்லை. உயிரியலின் இயங்கியல் கோட்பாடு இப்படித்தான் அமைந்திருக்கிறது. ஒரே ஒரு தனி மாந்தனுக்குள்ளேயே கருத்தளவிலும், உள்ளுறுப்புகளின் அளவிலும் கூட இப்போட்டி முயற்சிகளும் நடந்து கொண்டுதாம் இருக்கின்றன.

ஆகவே, செயல் நிலைகளில் எதிர்ப்புகளையும் பிறர் குறுக்கீடுகளையும் கொண்டு அஞ்சத் தேவையில்லை. அதனை ஒரு செயல் போட்டி என்றும், அஃது இயற்கை என்றுமே கருதிக் கொள்ளல் வேண்டும்.

4. பிறர் கூறு பழிகளைப் பொருட்படுத்தாமை: இதுவும் முந்திய வகை முயற்சியுணர்வே எனலாம். ஒருவரின் செயல் வலிமைக்கு எதிராக நின்று இயங்க முடியாதவர்கள், அல்லது இயங்கத் தெரியாதவர்கள், கருத்தளவில் எதிர் நின்று இயங்கும் உணர்வு இது. பொறாமைப்படுவது, எள்ளுவது, இழிப்பது, பழிப்பது, எதிர்ப்பது, பகைப்பது ஆகியன கருத்தளவானும், போட்டியிடுவது, இடையூறு விளைவிப்பது, வஞ்சிப்பது, ஏமாற்றுவது, அழிப்பது ஆகியவை செயலளவானும் நிகழுபவையாகும். எனவே இதுவும் உயிரியங்கியல் செயல்நிலை முயற்சிகளுள் ஒன்றேயாகும் என்று கருதி அதனைப் பொருட்படுத்தாத உணர்வை ஒரு செயலாளன் பெறுதல் வேண்டும் என்பது.

5. ஆடம்பரம் விரும்பாமை: ஆடம்பரம் என்பது அளவி மீறிய தேவைகளும், அவற்றைப் பெறுவதும் துய்ப்பதுமான கவர்ச்சியான செயற்பாடுகளே. இதுவும் பிறர்க்கு எரிச்சலூட்ட வேண்டும் எனபதற்காகவும் அவர்களுக்குத் தம்மின் மேனிலைகளை உயர்த்திக்காட்ட வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் தம்மைப் பார்த்து மனம் அழிய வேண்டும் என்பதற்காகவும் செய்யப் பெறும் போலிமை முயற்சிகள், இதுவும் பொறாமை உணர்வின் வெளிப்பாடே. எனவே இந்தச் செயலை உண்மையான செயல் விரும்பிகள் செய்யக்கூடாது என்பது.

6. எளிதாக நம்பு திறனும், எளிதாக நம்பாமையும்: முரண்பாடுகள் போல் தோன்றும் இவ்வுணர்வு ஒரு செயல் திறமுடையவனுக்கு மிகவும் தேவையான இரு எதிர் உணர்வுகளாகும்.