பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

238. உயிர் வாழ்க்கை என்பது என்ன ?

வாழ்க்கை என்பது, உயிர் ஒரு செயலில் தோய்ந்து அழுந்தியியங்கி, அதன் வழியாகப் பெறும் அறிவுநிலை, உளநிலை, இயக்கநிலை ஆகிய மூநிலை உணர்வு நிலைகளையும் எய்தி, அவற்றால் அதன் ஒளிக்கூறும் உணர்வுக் கூறும் மிக விரியப் பெற்று, அதனால் வாய்க்கப் பெறும் நிலையான இன்பத்தில் மூழ்கி நிற்க எடுத்துக் கொள்ளும் பயிற்சியே ஆகும். அப்பயிற்சிக்கு இவ்வுலகமும் இது போலும் வேறு உலகங்களும் பயிற்றகங்களாக பள்ளிக்கூடங்களாக - கல்லூரிகளாக விளங்குகின்றன. நாம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று, அங்கு எப்படிப் படிக்காமலும் பயிற்சி பெறாமலும் இருத்தல் கூடாதோ, அப்படியே ஒருயிர் தமக்குற்ற துய்ப்புக்கருவியாகிய இவ்வுடலுடன் இந்நிலவுலகத்திற்கு வந்து, பயிற்சி பெறாமல் இருத்தல் கூடாது. எனவே, இங்குப் பிறவியெடுத்த ஒவ்வோருயிரும் இங்கு வாழ்கின்ற வரையில் ஏதாவது தமக்குற்ற ஒரு செயல் வழி இயங்கிப் பயின்று, அதால் இன்பதுன்ப நுகர்ச்சி பெற்று, தம் அறிவுணர்வும் மனவுணர்வும் இயக்கவுணர்வும் மிகவும் விரிவும் விளக்கமும் பெறும்படி செய்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு பிறவி பெற்று ஏதாமொரு செயலில் ஈடுபடாத உயிர் பள்ளிக்குச் சென்று படிக்காமல் காலத்தை வீணே கழிக்கும் மாணவனைப் போன்றதாகும். அஃது, அப்பள்ளித் தேர்வுகளில் தோல்வியுற்றுத் தோல்வியுற்று நெடுங்காலமும் கடைத்தேறாத மாணவனைப் போல் இவ்வுலகச் சுழற்சியில் சிக்கிச் சுழன்று திக்கித் திணறிக் கிடக்க வேண்டியதுதான். எனவேதான் வினையே மக்களுக்கு உயிர் வாழ்க்கை என்று குறிக்கப்பெற்றது.

9. செயலும் செயல் திறனும்

இனி, ஒரு செயல் எவ்வாறு செய்யப் பெறுதல் வேண்டும். அதில் எவ்வகையில் கருத்துச் செலுத்துதல் வேண்டும். முறைப்படி நாம் ஒரு செயலில் ஈடுபடுமுன், எந்தெந்தத் துணைநிலைகளை ஆய்தல் வேண்டும் என்பன பற்றியெல்லாம் நம் செந்தமிழ் நூல்களில் குறிப்பாகத் திருக்குறளில் என்னென்ன சொல்லப் பெற்றிருக்கின்றன, என்பது பற்றி இக்கட்டுரைத் தொடரில் ஓரளவு ஆயலாம். இக்கட்டுரைத் தொடர் மிக இன்றியமையாத ஒரு கருத்துக் குவியலாகும். இக்காலத்து இளைஞர்கள் பலரும் பெரியவர்கள் சிலரும் வினை அல்லது செயல் என்பது பற்றியோ, வினைத்திறன் அல்லது செயல் திறன் என்பது பற்றியோ, ஆழமற்ற அறிவுடையவர்களாக உள்ளதைப் பலநிலைகளிலும் கண்டு மிகவும் வருந்தியிருக்கின்ற ஒரு நிலையே இக்கட்டுரைத் தொடரை எழுதத் துண்டுகோலாய் இருந்தது.